Farewell 5 judges madras high court
வழியனுப்பு விழா
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.ஹேமலதா நேற்று ஓய்வு பெற்றார். அதேபோல ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் நாளை (வெள்ளிக்கிழமை) ஓய்வு பெறுகிறார். அவரைத் தொடர்ந்து ஐகோர்ட்டு நீதிபதிகள் ஏ.ஏ.நக்கீரன் வருகிற 9-ந்தேதியும், பவானி சுப்பராயன் 16-ந்தேதியும், வி.சிவஞானம் 31-ந்தேதியும் ஓய்வு பெறுகின்றனர்.
மே மாதம் கோடை கால விடுமுறை என்பதால், இந்த 5 நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில் வழியனுப்பு விழா நேற்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 5 நீதிபதிகளையும் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் புகழ்ந்து பேசினார். இதற்கு நன்றி தெரிவித்து நீதிபதிகள் பேசினர்.
நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர்
நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசும்போது, ‘‘நெல்லையில் வக்கீலாக இருக்கும் என் பெரியப்பா கே.எஸ்.குமரகுருபரன், பெரியம்மா ராஜதுரை அம்மாள் ஆகியோர்தான் என்னை வக்கீலுக்கு படிக்க வைத்து ஒழுக்கத்துடன் வாழ கற்றுக் கொடுத்தனர். அவர்களுக்கும், என் பெற்றோருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று பேசினார். அதேபோல, நீதிபதி ஆர்.ஹேமலதாவும் தன் குடும்பத்தினருக்கும், வக்கீல்களுக்கும், சக நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.
நீதிபதி பவானி சுப்பராயன் பேசும்போது, ‘‘எனக்கு சந்தோசம், துக்கம் எல்லாமே இந்த சிவப்பு (ஐகோர்ட்டு) கட்டிடத்தில்தான் நடந்தது. இனி இந்த கட்டிடம் எனக்கு எட்டாகனியாக இருந்தாலும், மன மகிிழ்ச்சியுடன், என் பணியை சிறப்பாக செய்துள்ளேன் என்ற மன நிம்மதியுடன் விடைபெறுகிறேன்’’ என்றார்.
நகைச்சுவை பேச்சு
இதன்பின்னர் நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் எதார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் தமிழில் பேசியது, கூட்டரங்கில் உள்ள அனைவரையும் கவர்ந்தது. அவர் பேசியதாவது:-
எளிமையாக இருக்கிறோம் என்று விளம்பரம் தேடும் இந்த காலக்கட்டத்தில், நானும் எளிமையாக இருப்பது போல எனக்கு வழியனுப்பு விழா வேண்டாம் என்று சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால், தலைமை நீதிபதியிடம் சொல்ல தைரியம் இல்லை. அதனால் ஒப்புக்கொண்டேன். அட்வகேட் ஜெனரல் இந்த கூட்டத்தில் என்னை புகழ்ந்து பேசி விட்டார். அது உண்மையா என்பதை நீங்கள் (வக்கீல்கள்) தான் முடிவு செய்து எனக்கு தீர்ப்பு வழங்கவேண்டும்.
நான் வக்கீலாகி அடுத்த 4½ ஆண்டுகளில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டு விட்டேன். அதனால் நடுவுல சில பக்கங்களை காணும் என்பது போல என் வக்கீல் நண்பர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டனர்.
தண்டனை இடமாற்றம்
நீதிபதி பதவிக்கு நடந்த நேர்காணலை அப்போது ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த பத்மினி ஜேசுதுரைதான் நடத்தினார். அப்போது, எனக்கு சின்ன வயது, அதனால் அவர் என்ன கேள்வி கேட்டார், நான் என்ன பதில் சொன்னே? என்று தெரியவில்லை. இறுதியில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டேன். அப்போதெல்லாம் மாஜிஸ்திரேட்டுக்கு பயிற்சி கிடையாது. பணி நியமன உத்தரவு கிடைத்ததும், நேரடியாக வழக்கை விசாரிக்க வேண்டியதுதான். என் பணி காலத்தில், ஒரு முறை தண்டனையாக நாங்குநேரி கோர்ட்டுக்கு என்னை அனுப்பி விட்டனர். அதனால், அடிச்சு பிடிச்சு, சிலரை காக்கா புடிச்சு, உளுந்தூர்பேட்டை கோர்ட்டுக்கு மாறி வந்தேன்.
ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். 2 ஆண்டுகளுக்கு பின்னர் என்னை நிரந்தரம் செய்யவில்லை. கூடுதல் நீதிபதியாக என்னை நீட்டிக்க வைத்தனர். ஒருவேளை என்னை நிரந்தரம் செய்யவில்லை என்றால், இந்த வழியனுப்பு விழாவே எனக்கு நடந்திருக்காது.
தெரியவில்லை
எனக்கு கீழ் கோர்ட்டுகளில் சிவில் நடைமுறை சட்டத்தின் கீழ் தான் சிவில் வழக்குகளை விசாரித்து பழக்கம். ஆனால், சென்னை ஐகோர்ட்டில் ஒரிஜினல் சைடு சிவில் வழக்குகளை விசாரிக்க தனி விதியே உள்ளது. அந்த விதி எனக்கு முதலில் தெரியவில்லை. இந்த விதியை சொல்லி சொல்லியே என்னை மிரட்டி வக்கீல்கள் சிலர் வாதம் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேச பேச கூட்டரங்கத்தில் இருந்த நீதிபதிகள், வக்கீல்கல் என்று எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டனர்.
இவரை தொடர்ந்து நீதிபதி வி.சிவஞானம் பேசினார். அவரும் நகைச்சுவையாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள், மூத்த வக்கீல்கள் என்று ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.