Admk former minister murder appeal case smsj bench order notice

அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி பவாரியா கும்பலை சேர்ந்த குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் குறித்து தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த சுதர்சனத்தை, 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

இந்த வழக்கில் ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். முக்கியக் குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஹரியானாவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மூன்று பெண்கள் தலைமறைவான நிலையில், ஓம்பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டனர்.

மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூன்று பேரை குற்றவாளிகள் என அறிவித்து, ராகேஷுக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. ஜெகதீஷ், அசோக் ஆகியோருக்கு தலா நான்கு ஆயுள் தண்டனையும், தலா 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. ஜெயில்தார்சிங்கை விடுதலை செய்தும் தீர்ப்பளித்த்து.

இந்த நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த வழக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை கால சிறப்பு அமர்வின் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com