Rskj bench order setaside
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வந்தவர்கள், தங்களை பணி வரன்முறை செய்து, உதவி பேரசிரியர்களாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 1,146 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக சிறப்புத் தேர்வு நடத்தி, உதவி பேராசிரியர்களாக நியமிப்பது தொடர்பான 2020ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்பிறகு, 2022ஆம் ஆண்டு அந்த பணி வரன்முறை செய்த அரசாணையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு முன் மூன்று ஆண்டுகளாக காலியாக இருந்த 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், 2020ஆம் ஆண்டு பிறப்பிக்கபட்ட அரசாணையின் அடிப்படையில் தங்களை பணிவரன்முறை செய்யக் கோரி கவுரவ விரிவுரையாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 2022ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்வது தொடர்பான அரசாணையின் அடிப்படையில் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் என 2024 ஏப்ரல் 2ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக உயர் கல்வித் துறை, கல்லூரி கல்வி இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, கவுரவ விரிவுரையாளர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் அளவிலான குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்பது என்பது உச்ச நீதிமன்றம் வகுத்தளித்த போட்டித் தேர்வு நடைமுறை கொள்கையை நீரத்துப்போகச் செய்துவிடும் என கூறி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும், பணி வரன்முறை என்பது, தேர்வு நடைமுறை என்பது வெவ்வேறானவை எனவும், பணி வரன்முறையை உரிமையாக கோர முடியாது எனவும், நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கவுரவ விரிவுரையாளர் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது என தெரிவித்த நீதிபதிகள், அரசு கல்லூரிகளில் உள்ள 1,146 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்களாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட கல்லூரிகளுக்கான 146 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 1,292 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மொத்தமாக 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 42,064 பேர் விண்ணப்பித்துள்ளதால் அவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்டும்; இதில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அவர்கள் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ்ஜாக வழங்கலாம்; நீண்ட கால பணியாற்றிய கவுரவ விரிவுரையாளர்களுக்கு வயது வரம்பு தளர்வு வழங்க வேண்டும்; இந்த தேர்வு நடைமுறைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
தேர்வு நடைமுறை முடிந்து நியமன உத்தரவுகள் வழங்கும் வரை கவுரவ உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வருபவர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.