Pp maravanan / grsj bench / போக்சோ case

ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்தை விடுதலை செய்த தீர்ப்பைத் திருத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை போரூர் அருகே கடந்த 2017ஆம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தொடர்பான வழக்கில் கைதான தஷ்வந்த் என்ற இளைஞருக்கு மரண தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு 2018ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்ததுடன், அவரை விடுதலை செய்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை திருத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த எஸ்.வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தஷ்வந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது; ஆனால் உயர் நீதிமன்றம் அதுபோன்ற சான்றிதழ் எதுவும் வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது; இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது; இது நீதித்துறையை ஏமாற்றும் நடவடிக்கை மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பு செயலும் என்பதால், தஷ்வந்த் விடுதலை செய்த தீர்ப்பை திரும்பப்பெற வேண்டியது அவசியம் என்பதால், தீர்ப்பைத் திருத்தக் கோரி தமிழக அரசுகக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து தீர்ப்பைத் திருத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com