உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கோடீஸ்வர் அமர்வு, உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கிற்கு தடை உத்தரவு பிறப்பித்து ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைத்தது

தமிழக அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற விளம்பரத்தை எதிர்த்து தொடரப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் வழக்கானது ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது..ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அல்லது ஏற்கனவே படித்துவிட்டு இருக்கும் மாணவர்களுக்கு பழநி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி போன்ற திருக்கோயில்களில் ஏற்கனவே பணியில் இருக்கும் மூத்த அர்ச்சகர்களின் கீழ் ஓராண்டு பணி அனுபவம் பெறவும், அவர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்குவதற்கும் தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. இது சம்பந்தமாக ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பாக தொடரப்பட்ட பல வழக்குகளில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில்,‛‛ கோயில்களில் ஆகம முறைப்படியே ஆதி சைவர் மற்றும் பட்டாச்சாரியார்கள் பணி அமர்த்தபட வேண்டும். ஆகமத்திற்கு விரோதமாக பணி அமர்த்தபடுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது.2021ம் ஆண்டு தமிழக அரசினால் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்கு முரணாக பணி அமர்த்துப்பட்டு இருந்தால் அவர்களுடைய பணி செல்லுபடியாகாது. ஆதி சைவர் அல்லது பட்டாச்சாரியார்கள் மட்டும் கோயிலில் பணி அமர்த்தப்படுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி விரோதமானது கிடையாது”. இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.இதையடுத்து வயலூர் முருகன் கோயிலில் ஆகம விதிகளுக்கு விரோதமாக பணி அமர்த்தப்பட்ட இருவரை பதவி நீக்கம் செய்ய அந்த கோயிலின் சிவாச்சாரியார்கள் நீதிமன்றத்தினை அணுகினர். அந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம், ஆதி சைவர் அல்லாதவர்கள் கோயிலில் பூஜை செய்வது ஆகம விதிகளுக்கு விரோதமானது. அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்த அந்த இரு மாணவர்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் பணி செய்ய 2018ம் ஆண்டு வந்த விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பினை முறையாக கருத்தில் கொள்ளாமல், ஆகமம் படித்தவர்கள் ஜாதி பாகுபாடு இன்றி பணி அமர்த்தப்படலாம் என தீர்ப்பு வழங்கி இருந்தது. இது அரசியல் அமைப்பு சட்டத்தின் ஷரத்து 16 (5)க்கு முற்றிலும் முரணானதாகும். ஷரத்து 16(5) ஆனது அரசின் கீழுள்ள எந்த அலுவலகத்திலும் பணி நியமனம் குறித்த விவகாரங்களில் எல்லா குடிமகன்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்என்று கூறுகிறது. இந்த ஷரத்தின் விதிவிலக்காக ஒரு மத நிலையத்தில் ஏற்கனவே உள்ள மத விஷயமான அல்லது சமய வழிபாடு தொடர்பான பணியில் குறிப்பிட்ட மதத்தினர் தான் இருக்க வேண்டும் என்றோ அல்லது, குறிப்பிட்ட தனிப்பிரிவினர் தான் இருக்க வேண்டும் என்றோ, அரசின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகளில் பாகுபாடு இன்மை என்ற கோட்பாட்டின் கீழ் வராது என்று இருக்கிறது.சேலம் சுகவனேஸ்வரர் கோயில் தீர்ப்புக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மனுதாரர் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆகமம் படித்தவர்கள் ஜாதி பாகுபாடு இன்றி பணி அமர்த்தப்படலாம் என்ற தீர்ப்பிற்கு தடை உத்தரவு தர தாமதம் ஆனது.இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் பணி நியமனம் செய்யக்கூடாது என தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் அர்ச்சகர்கள் நியமனம் செய்யும் அனைத்து வழக்குகளையும் உச்சநீதி மன்றத்திற்கு இடமாற்றம் செய்ய பதிவு செய்யப்பட்ட வழக்கானது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான மேல்முறையீடு வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு. P. வள்ளியப்பன் அவர்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதினால், சென்னை உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீடு தொடர்பான இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்கு முடியும் வரை விசாரிக்க கூடாது என வாதிட்டார்.

இதனை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று வர அறிவுறுத்தி இந்த வழக்கை கடந்த வாரம் ஒத்தி வைத்தனர். அதனை மேற்கொண்டு இந்த வழக்கினை அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கக் கோரி செய்யப்பட்ட மனு வாரது கடந்த வாரம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கோடீஸ்வர் அமர்வு, உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கிற்கு தடை உத்தரவு பிறப்பித்து ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைத்தது

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com