வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், நவம்பர் 25 ம் தேதி விளக்கமளிக்க மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில், வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், நவம்பர் 25 ம் தேதி விளக்கமளிக்க மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நாய்கடி சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 24 ஆம் தேதிக்குள் வளர்ப்பு நாய்கள் குறித்த விவரங்களை பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மேலும், பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும் போது, அவற்றுக்கு முகவாய் கவசம் போட வேண்டும் எனவும், கழுத்து கயிறு இல்லாமல் வெளியில் அழைத்து செல்லக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
பதிவு செய்யப்படாமல் பிராணிகளை வைத்திருந்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், முகவாய் கவசம் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை எதிர்த்து, இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு தனிநபருக்கு நான்கு நாய்களுக்கான உரிமம் மட்டும் வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. இதன்மூலம் கைவிடப்பட்ட, காயமடைந்த நாய்களை காப்பாற்றி, பராமரிக்கும் அமைப்புகளுக்கு விலக்களிக்க வேண்டும் எனவும், உரிமம் இல்லாமல் நாய்கள் வைத்திருந்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம், கைவிடப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் மனுவில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் ஒரு லட்சம் வளர்ப்பு நாய்கள் இருப்பதாகவும், அவற்றில் 31 நாய்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
69 ஆயிரம் நாய்களை நவம்பர் 24 ம் தேதிக்குள் பதிவு செய்ய முடியுமா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், ஒரு நாளைக்கு 5000 நாய்கள் பதிவு செய்யப்படுவதாக விளக்கமளித்தார். மேலும், உரிமம் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்த பின், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுதாரர் எழுப்பியுள்ள பிரச்னைகள் குறித்து விளக்கமளிக்கும்படி, மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 25 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
…..