தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, தற்போதைய டிஜிபி ஆகஸ்ட் 31 ல் தான் ஓய்வுபெற உள்ளார். நிர்வாக ரீதியிலான இந்த விவகாரத்தில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

தமிழகத்துக்கு டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக டிஜிபி-யாக பதவி வகிக்கும் சங்கர் ஜிவால், ஆகஸ்ட் 31 ஆம் தேதி பணி ஓய்வுபெறுகிறார். இந்நிலையில், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் தாமோதரன், உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, 30 ஆண்டுகள் பணியில் உள்ள அதிகாரிகளின் பட்டியலை, டிஜிபி ஓய்வுபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குழு, இந்த பட்டியலை ஆய்வு செய்து, தகுதியான மூன்று பேரின் பெயர்களை மாநில அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அந்த மூன்று அதிகாரிகளில் ஒருவரை அரசு நியமிக்கவேண்டும். ஆனால், தகுதி வாய்ந்த எட்டு அதிகாரிகள் உள்ள நிலையில், மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிஜிபி நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் உச்ச நீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் டிஜிபி நியமன நடைமுறைகளை மேற்கொள்ளக் கோரி அளித்த மனு மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, தற்போதைய டிஜிபி ஆகஸ்ட் 31 ல் தான் ஓய்வுபெற உள்ளார். நிர்வாக ரீதியிலான இந்த விவகாரத்தில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மேலும், புதிய டிஜிபி நியமனம், உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம். தற்போது இந்த வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com