ஓய்வு பெறும் நேரத்தில் டிஸ்மிஸ் செய்யக்கூடாது
சென்னை, மே.9-
நாமக்கல் மாவட்டம், அரியலூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்தவர் எம்.சுந்தரமூர்த்தி. இவர், 0.72.0 ஹெக்டர் குட்டை புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பட்டா வழங்கலாம் என்று அறிக்கை கொடுத்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதுகுறித்து 2006-ம் ஆண்டு துறை ரீதியான விசாரணை நடந்தது. அப்போது, சுந்தரமூர்த்தி தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விளக்கம் அளித்தார். இதையடுத்து, இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விசாரணை அதிகாரி அறிக்கையும் கொடுத்தார். ஆனால், இவரை ஓய்வு பெற அனுமதிக்காமல், பணி நீக்கம் செய்து கடந்த 2017-ம் ஆண்டு வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை பணி செயலாளர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சுந்தரமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ரவி ஆஜராகி, குற்றச்சாட்டு நிரூபிக்க வில்லை என்று அறிக்கை கொடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் மனுதாரரை டிஸ்மிஸ் செய்துள்ளனர்.
அதுவும், பட்டா வழங்கி விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார், தாசில்தார் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அவர்களை எல்லாம் ஓய்வு பெற அனுமதித்த அரசு, மனுதாரரை மட்டும் 10 ஆண்டுகளுக்கு பின்னர் டிஸ்மிஸ் செய்துள்ளது. இத்தனைக்கும் லஞ்சம் வாங்கி மனுதாரர் செயல்பட்டார் என்ற புகார் எதுவும் இல்லை. என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் டி.செழியன் ஆஜராகி, ‘‘அரசு நிலத்தை பாதுகாப்பு கிராம நிர்வாக அலுவலரின் கடமை மற்றும் பொறுப்பாகும். ஆனால், இவர் குட்டை புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பட்டா வழங்க பரிந்துரை செய்துள்ளார். இவர் தீவிர குற்றச் செயலில் ஈடுபட்டதால், காலதாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூற முடியாது’’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, ‘‘பட்டா வழங்கிய விவகாரத்தில் தாசில்தார் உள்பட அனைவரும் எந்திரத்தனமாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் ஆவணங்களை பார்க்கவில்லை. அதற்காக பொறுப்புகளை எல்லாம் மனுதாரர் தலையில் வைக்க முடியாது. துணை தாசில்தாருக்கு ஓய்வூதியத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் குறைத்து 5 ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு ஓய்வு பெற அனுமதித்துள்ள நிலையில், மனுதாரரை மட்டும் 10 ஆண்டுகளுக்கு பின் டிஸ்மிஸ் செய்தது ஏற்க முடியாது. அதுவும் இதுபோல நீண்ட காலதாமதமாக ஓய்வு பெறும் நேரத்தில் டிஸ்மிஸ் செய்யக்கூடாது என்று சுப்ரீ்ம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, மனுதாரரை டிஸ்மிஸ் செய்த உத்தரவை ரத்து செய்கிறேன். அவரை ஓய்வு பெற அனுமதித்து, ஓய்வூதிய பண பலன்களை 6 வாரத்துக்குள் வழங்கவேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.