ஈஷா எரிவாயு தகன மேடை சிக்கல் தீர்ந்தது
ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட எரிவாயு தகன மேடை அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகே கட்டப்பட்டுள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் ஈஷா சார்பில் எரிவாயு தகன மேடை அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்ய கோரி இக்கரை போளுவாம்பட்டியை சேர்ந்த எஸ்.என்.சுப்ரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தரப்பில் பதில் மனு, தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தொண்டாமுத்தூர் தொகுதியில் 5 கிராம மக்களுக்கு பயன்பெறும் வகையில் மின் தகன் மேடை அமைக்க ஈஷா முடிவு செய்தது.
அதன்படி மின் தகன மேடை அமைக்க இக்கரை போளுவாம்பட்டி, நரசிபிராம்,ஜாகிர் நாயக்கம் பாளையம்,மத்தவராயபுரம் மற்றும் வெள்ளிமலைப்பட்டினம் சுற்றியுள்ள 5 கிராம பஞ்சாயத்துகள் கடந்த 2022 ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது.
பின்னர் இந்த தீர்மானங்களுடன், 2.63 ஏக்கர் பரப்பில் எரிவாயு தகன மேடை அமைக்க அனுமதி கோரி கோவை மாவட்ட பஞ்சாயத்து துணை இயக்குனர், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோருக்கு ஈஷா கடிதம் அனுப்பியது விண்ணப்பித்தது.
இந்த விண்ணப்பங்களை ஏற்று, மின் தகன மேடை அமைக்க 2023ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
ஈஷா நிறுவனம் தனது சொந்த நிதியில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெற்று எரிவாயு தகன மேடையை கட்டிய பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
மற்ற எதிர்மனுதரர்கள் வழக்கில் பதிலளிக்க ஏதுவாக வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.