சுப்ரீம் கோர்ட் சூப்பர் அவையா?
-கே.சந்துரு
மேனாள் நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநர் ரவியை கடிந்து கொண்டதுடன் தமிழக சட்டப்பேரவை அனுப்பிய வரைவு சட்டங்களுக்கு அவர் ஒப்புதல் தராமல் காரணமின்றி காலம் தாழ்த்தியதோடு, அதை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் ஆளுநர் சட்டப்பேரவை அனுப்பிய சட்ட வரைவுகளை உடனடியாக ஒப்புதல் தரவேண்டுமென்றும் அப்படி தருவதை மறுப்பதற்குக் காரணம் இருந்தால் அதை உடனடியாக தெரிவித்து சட்டப்பேரவைக்கு மீண்டும் பரிசீலனைக்கு அனுப்பலாம். ஆனால் மறுபடியும் சட்டப்பேரவை அந்த சட்டவரைவை நிறைவேற்றினால் எவ்வித காலதாமதமுமின்றி உடனடியாக ஒப்புதல் தரவேண்டுமென்று உத்தரவிட்டனர்.
நீதிமன்றங்கள் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த பிறகு அதில் அரசாங்கத்தின் உத்தரவு தவறு என்ற முடிவுக்கு வந்தால் மறுபடியும் அதே அதிகாரியிடம் அந்த கோப்பை திருப்பியனுப்பி அவரையே உத்தரவிடும்படி ஆணையிடுவார்கள். அப்படி செய்யும்போது மீண்டும் அந்த அதிகாரி /அரசு அந்த கோப்பு குறித்து எவ்வித பரிசீலனையும் செய்ய வேண்டாம் என்ற சூழ்நிலையில் கோப்பை மறுபரிசீலனைக்கு அனுப்புவதைத் தவிர்த்து நீதிமன்றமே அந்த உத்தரவை நேரடியாக தனது ஆணையின் மூலம் தெரிவிக்கும். இப்படி கோப்பை மறுபரிசீலனைக்கு அனுப்ப வேண்டாத சூழ்நிலையை ” தேவையற்ற சம்பிரதாயம்” (useless formality) என்றழைப்பார்கள்.
ஆளுநர் ரவியிடம் 10 வரைவு சட்டங்களையும் அவரது கையெழுத்துக்கு மறுபடியும் அனுப்ப தேவை ஏதும் இல்லாததனால் உச்சநீதிமன்றமே அந்த சட்டவரைவுகளுக்கு ஒப்புதலளித்து உத்தரவிட்டது. அரசமைப்பு சட்டம் 142வது பிரிவில் உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எந்த வழக்கிலும் முழுமையான மற்றும் தேவையான நீதியை அளிப்பதற்கு (full and effective justice) உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமுள்ளது.
பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழக்கை விசாரித்த பிறகு கீழமை நீதிமன்றங்கள் (அ) உயர்நீதிமன்றம் இவற்றிற்கு அவ்வழக்கை தங்களது தீர்ப்பின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்வதற்கு திருப்பியனுப்பாமல் (மல் (remand) அவர்களே இறுதித் தீர்ப்பையும் வழங்கிய பல தீர்ப்புகள் உள்ளன. உதாரணமாக, திருமண விவாகரத்து வழக்குகளில் குடும்ப நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டு கணவன் மனைவி இருவரையும் நேரில் விசாரித்து (அ) அவர்களது வக்கீல்களின் கருத்தைக் கேட்டு உச்சநீதிமன்றமே விவாகரத்து வழங்கிய நூற்றுக்கணக்கான தீர்ப்புகள் உண்டு.
அதேபோல் சிவில் வழக்குகளில் ஆரம்பகட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும்போது அவ்வழக்கு பற்றி மட்டும் தீர்ப்பளிக்காமல் காலதாமதத்தைத் தவிர்க்கும் விதமாக இறுதி சிவில் வழக்கின் தீர்ப்பையும் அவர்களே அளித்த பல தீர்ப்புகள் உள்ளன. ராமர் கோயில் வழக்கில் 80 வருடத்திற்கு மேல் நடந்து வந்த சிவில் வழக்கை உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியதுடன் மசூதி இடித்த இடத்திலேயே ராமர் கோயில் கட்டுவதற்கும் அந்த மசூதி இடந்த இடத்திற்கு மாற்றாக அயோத்தியிலேயே வேறு ஒரு இடத்தில் உத்திரப் பிரதேச அரசை மாற்றிடம் வழங்குவதற்கு உத்திரவிட்டது. மேலும் ராமர் கோயிலைக் கட்டுவதற்கு வழக்காடிகளுக்கு அனுமதியில்லாமல் ஒன்றிய அரசையே அறக்கட்டளை ஒன்று துவக்கி கோயில் கட்டுவதற்கு அதிகாரம் அளித்தது.
இப்படிப்பட்ட சிறப்பு அதிகாரங்களையெல்லாம் அனுபவித்த சிலர் இன்று உச்சநீதிமன்றத்தை எதிர்த்து கூக்குரலிடுகிறார்கள். அதில் ஒன்றிய அரசின் துணைக் குடியரசுத் தலைவர் தங்கரும் ஒருவர். அவர் குடியரசு துணைத் தலைவர் மட்டுமல்ல. அந்தப் பதவியினால் மாநிலங்களவையின் தலைவராகவும் செயல்படுபவர். ஆளுநர் அதிகார வழக்கில் உச்சநீதிமன்றமே சட்டவரைவுகளுக்கு ஒப்புதல் அளித்ததையும் மாநில ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் சட்டவரைவுகளில் ஒப்புதல் தருவதற்கு மூன்று மாத காலநிர்ணயம் செய்ததை அவர் சட்டவிரோதம் என்று கூறியுள்ளார். இப்படி வழக்குகளில் நீதிமன்றமே தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிப்பதை தான் அவர் உச்சநீதிமன்றம் நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் மேலாக ஒரு சூப்பர் அவையாக மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்பு சட்ட 142வது பிரிவின் கீழ் அளித்த உத்தரவைக் குறிப்பிடும்போது அது அணு ஏவுகணை போன்ற ஆயுதமாகிவிட்டதாக கிண்டலடித்தார். ஒன்றிய அரசின் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒருவர் தனது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் குன்று விளைவிக்கும் வகையில் இப்படிக் குறிப்பிடலாமா என்ற விவாதம் எழுந்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக செயல்படுகிறதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இதையும் தாண்டி ஒரு வட இந்திய பா.ஜ.க. தலைவர் உச்சநீதிமன்றம் வக்ப் சட்டத்திருத்தத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்குகளில் இடைக்காலத்தடை விதிக்க முன்வந்ததோடு ஒன்றிய அரசு சிறுபான்மையினர் நலனுக்கு விரோதமாக செயல்படுவதைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றம்தான் இந்த நாட்டின் உள்நாட்டுப் போருக்குத் தூண்டிவிடுகிறது என்று குறிப்பிட்டு மேலும் இந்த விவாதத் தீயிக்கு தன் பங்குக்கு எண்ணெய் ஊற்றினார். கண்டனக் கணைகள் பெருகத் தொடங்கியவுடன் பா.ஜ.க. தலைவர் அது அந்த உறுப்பினரின் தனிப்பட்ட கருத்து என்று கூறி ஜகா வாங்கிவிட்டார்.
மேலும் சிலர் தங்களைத் தாங்களே அரசமைப்பு சட்ட நிபுணர்கள் என்று கூறிக்கொண்டதுடன் ஆளுநர் அதிகார வழக்கை இரு நீதிபதிகள் விசாரித்திருக்கக் கூடாது என்றும் அரசமைப்பு சட்டம் 145(3)-ன் கீழ் அதைக் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்திருக்க வேண்டுமென்று ஒரு புதிய ”எண் விளையாட்டை” துவக்கி வைத்துள்ளனர். அரசமைப்பு சட்டப் பிரிவுகளைக் குறித்த வியாக்கியானம் அளிக்க வேண்டிய வழக்குகள் என்றால் அப்பிரிவின்படி அது ஐந்து நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் ஏற்கனவே அதிக எண்ணிக்கை உள்ள அமர்வு அப்பிரிவுகள் குறித்து வியாக்கியானம் செய்த தீர்ப்புகள் இருக்கும்போது மீண்டும் மீண்டும் அவ்வழக்குகள் ஐந்து நீதிபதிகள் அமர்வில்தான் விசாரிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தமில்லை.
சம்ஷெர் சிங் என்ற பஞ்சாப் மாவட்ட நீதிபதி பஞ்சாப் மாநில ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இந்த உத்தரவை இடுவதற்கு முன்னால் அவர் பஞ்சாப் மாநில முதலமைச்சர் அடங்கிய அமைச்சரவையின் ஆலோசனை பெறாமலேயே உத்தரவிட்டார். அவ்வழக்கு உச்சநீதிமன்ற ஏழு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த அமர்வில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரும் அங்கம் வகித்தார்.
ஏழு நீதிபதிகள் அமர்வு 1974-ல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. அதன்படி அரசமைப்பு சட்டப்பிரிவு 163-ன் கீழ் மாநில ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையின்றி எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாதென்றும் ஆளுநர் பதவி அரசமைப்பு சட்டத்தில் ஒரு கௌரவப் பதவி என்றும் ஆளுநர் காலனி அரசு நியமித்த ஆளுநர்கள் போல் செயல்பட முடியாது என்றும் தங்களது உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டனர். நீதிபதி சம்ஷெர் சிங்கை பதவி நீக்கம் செய்தது தவறு என்று குறிப்பிட்டதோடு மீண்டும் அவரது வழக்கை ஆளுநரிடமோ (அ) அரசாங்கத்திடமோ திருப்பியனுப்புவது தேவையற்ற செயல் என்று கூறியதோடு அந்த நீதிபதிக்கு முழு சம்பளம் அளிக்கும்படி உத்தரவிட்டனர்.
ஏழு நீதிபதிகள் ஆளுநரின் அதிகார வரையறையைத் தெளிவாக சுட்டிக்காட்டுவதற்காக அரசமைப்பு சட்ட அவையில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் இது குறித்து ஆற்றிய உரையின் ஒரு பகுதியையும் மேற்கோள் காட்டினர். அதன்படி அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவரின் அதிகாரம் நமது நாட்டில் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படவில்லை என்றும் அமெரிக்காவுக்கு மாற்றாக நமது நாட்டுக் குடியரசுத் தலைவர் ஒரு சாதாரண ஊழியரைக் கூட வேலைநீக்கம் செய்யமுடியாது என்று கூறியிருந்ததையும் நினைவூட்டினர்.
ஏற்கனவே பல முறை ஆளுநர்களின் அதிகாரம் குடியரசுத் தலைவர்களின் அதிகாரம் பற்றி பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியிருப்பதனால் மீண்டும் மீண்டும் அதுபற்றிய வழக்குகள் விசாரணைக்கு வந்தால் அவ்வழக்குகளை பிரிவு 145(3)-ன் கீழ் ஐந்து நீதிபதிகள் விசாரிக்க வேண்டுமென்ற தேவை எழாது. அரசமைப்பு சட்டத்தில் பிரிவு 74-ன் கீழ் குடியரசுத் தலைவர், பிரதமரின் தலைமையிலுள்ள அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் கீழ் செயல்படலாம் என்றும், அதேபோல் பிரிவு 163-ன் கீழ் மாநில ஆளுநர்கள் மாநில முதலமைச்சரின் தலைமையில் செயல்படும் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் கீழ் செயல்படலாம் என்றும்தான் முதலில் அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருந்தது (The President may in the exercise of his functions act in accordance with the advise tendered)
ஆனால் இந்திய நாட்டின் தலைமைப் பொறுப்பு குடியரசுத் தலைவருக்கு கொடுத்திருப்பதாலும், அவர்தான் முப்படைகளின் தலைவர் என்று அறிவித்திருப்பதாலும் அவர் திடீரென்று அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்றி தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கலாம், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் நியமிக்கப்பட்ட ஒன்றிய அமைச்சரவையை அவர் டிஸ்மிஸ் செய்துவிடலாம் என்ற வாய்ப்பு இருப்பதனால் 1976-ம் வருடம் 42வது அரசமைப்பு சட்டத்திருத்தத்தின்படி பிரிவு 74-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி குடியரசுத்தலைவர் ஒன்றிய அரசின் பிரதமரின் தலைமையில் செயல்படும் அமைச்சரவையின் கட்டளையை மட்டுமே செயல்படுத்த முடியும் என்று சட்டம் திருத்தப்பட்டது.
இந்திரா காந்தி நெருக்கடியின் போது கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்திருத்தத்தை பின்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. அடங்கிய ஜனதா அரசு ரத்து செய்யவில்லை. எல்லோருக்கும் ஒரு பொம்மை குடியரசுத் தலைவர்தான் தேவைப்பட்டது. இப்படி குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை ஆபரணப் பொருளாக மாற்றிய அரசுகள் அதன் பிரதிநிதிகள்தான் இப்பொழுது குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த உச்சநீதிமன்றத்தை சூப்பர் நாடாளுமன்றம் என்றும் அது அணு சக்தி ஏவுகணையை செலுத்துவதாகவும் குறை கூறுகின்றனர்.
உச்சநீதிமன்றம் ஆளுநர் அதிகாரம் பற்றி கூறிய தீர்ப்பை பரிசீலிக்கும் முன்னர் உச்சநீதிமன்றத்தின் அதிகார வரையறையை தெரிந்து கொள்வது அவசியம். இந்திய அரசமைப்பு சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள உச்சநீதிமன்றம்தான் உலகத்திலேயே அதிகமான அதிகாரம் மிக்கது என்பதை நாம் உணர வேண்டும். பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் உச்சநீதிமன்றத்தைப் பற்றி குறிப்பிடும்போது அதுதான் இந்த நாட்டின் இதயம் மற்றும் ஆன்மா என்று குறிப்பிட்டார். உச்சநீதிமன்றத்திற்கு சாதாரணக் குடிமகனின் அடிப்படை உரிமையை நிலைநிறுத்துவதற்கு அதிகாரம் அளிக்கவில்லை என்றால் அது ஒரு தேவையற்ற உறுப்பாகிவிடும் என்றும் குறிப்பிட்டார்.
அரசமைப்பு சட்டத்தின் 32வது பிரிவில் குடிமகன்களின் அடிப்படை உரிமையை நிலைநிறுத்துவதற்கு ஐந்து வகையான நீதிப்பேராணைகள் செலுத்துவதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 136-வது பிரிவில் இந்தியாவிலுள்ள எந்த தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கும், பிரிவுகள் 133, 134-ன் கீழ் அனைத்து சிவில் கிரிமினல் வழக்குகள் மீது மேல்முறையீடு செய்வதற்கும் 131-வது பிரிவில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடைப்படட வழக்குகளை விசாரிப்பதற்கும் அதேபோல் இரு மாநில அரசுகளுக்கு இடைப்பட்ட அதிகாரப் பிரிவினை வழக்குகளை விசாரிப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தவிர குடியரசுத் தலைவர் விருப்பப்பட்டால் (அதாவது ஒன்றிய அமைச்சரவை விருப்பப்பட்டால்) ஆலோசனை வழங்குவதற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இப்படி நாட்டின் உச்சகட்டமான நீதிமன்றமாக விளங்கும் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகள் 141-வது பிரிவின்படி இந்தியாவிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்றும், 144வது பிரிவில் சிவில் அரசாங்கமும் நீதித்துறையும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்கு உதவவும் செயல்படுத்தவும் கடமைப்பட்டவர்ககள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்தான் 142வது பிரிவில் ஒரு வழக்கில் முழுமையான மற்றும் இறுதியான மற்றும் பயனுள்ள தீர்ப்பை வழங்குவதற்கான சிறப்பதிகாரம் வழங்கப்பட்டுள்ளதையும் மேலே குறிப்பிட்டுள்ளோம்.
75 ஆண்டுகள் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி செயல்பட்டு வரும் உச்சநீதிமன்றத்தை திடீரென்று குறை கூற முன்வந்துள்ள அறிவிலிகள் பற்றி என்னவென்று கூறுவது? மாநில ஆளுநர்களை ஆரம்பகட்டத்தில் ஒரு ஆடம்பர கௌரவப் பதவியாகத்தான் நினைத்துவந்தனர். மாநிலத்தில் அதிகார பலமிக்க தலைவர்களின் உள் சண்டைகளைக் குறைப்பதற்காக அன்றைய ஆளும் காங்கிரஸ் மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்தது. 1967வது வருடத்திற்குப் பிறகுதான் எட்டு மாநிலங்களில் தோற்றுப்போன காங்கிரஸ் கட்சி அங்கு பதவியேற்ற மாநில அரசுகளுக்கு தொந்திரவு அளிப்பதற்காக ஆளுநர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தது.
ஆனால் இந்த கலையை பா.ஜ.க. அரசு முற்றிலுமாக வேறு விதமாக வடிவமைத்தது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபட்ட முதுபெரும் தலைவர்களுக்கு கௌரவம் வழங்கவும், அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவர்களை மாநில ஆளுநர்களாக நியமித்து தங்களது விருப்பம்போல் செயல்பட வைக்கும் புதிய உத்திகளை உருவாக்கியது. இதில் தங்களுக்கு ஆமாம் சாமி போட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளில் சிலரையும் ஆளுநர்களாக பதவியளித்து அவர்கள் செய்த சேவைக்கு நன்றி கூறியது.
ஏற்கனவே ஆளுநர்களும் குடியரசுத் தலைவரும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நடைமுறை இருந்ததனால் விரும்பிய மாநில அரசுகளைப் பாதுகாக்கவும், விரும்பாத அரசுகளை கலைக்கவும் முற்பட்டன. மாநில அரசுகள் அரசமைப்பு சட்டப்படி செயல்படவில்லை என்று ஆளுநர்களிடம் அறிக்கை பெற்று பிரிவு 356-ன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. ஆனால் 1994-ம் வருடம் எஸ்.ஆர்.பொம்மை என்ற வழக்கில் 9 நீதிபதிகள் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒன்றிய அரசின் உத்தரவுகள் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டவை என்று தீர்ப்பளித்தது ஒன்றிய அரசின் சர்வாதிகரத்திற்கு வைத்த முதல் முற்றுப்புள்ளி. கலைக்கப்பட்ட உத்தரகாண்ட் அரசு மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டதை நாம் அறிவோம்.
வேறு எந்த வழியிலும் ஆளுநரின் தவறான அதிகாரப் பிரயோகத்தை பயன்படுத்தலாம் என்று யோசித்ததின் விளைவுதான் பல்கலைக்கழக சட்டங்களில் ஆளுநர்களை பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்று காலனி அரசு ஏற்படுத்திய நடைமுறையை மீண்டும் தொடர ஆரம்பித்தனர். பல்கலைக்கழகங்களை உருவாக்குவது மாநில அரசின் சட்டங்களே. அதன்படி ஆளுநர்கள் அப்பல்கலைக்கழகத்தின் வேந்தர்கள் என்று இருப்பதை ஏன் மாநில சட்டமன்றங்கள் திருத்தி அமைக்க முடியாது? பல சட்டப் பல்கலைக்கழகங்களில் இந்திய தலைமை நீதிபதியும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் வேந்தர்களாக பொறுப்பு வகிக்கின்றனர். அப்படி இருக்கும்போது மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான முதலமைச்சரை வேந்தராக அறிவிப்பதற்கு சட்டமன்றங்களுக்கு உரிமை கிடையாதா என்பதுதான் இன்றைய பிரச்சினை.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் முதல்முறையாக சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர்களை அறிவித்த 10 சட்டத்திருத்தங்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டதுதான் போராட்டத்தின் துவக்கம். அவரைப் போலவே கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான், தெலுங்கானாவின் ஆளுநர் தமிழிசை மற்றும் பஞ்சாபின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டத்திற்கு புறம்பாக சட்ட வரைவுளுக்கு ஒப்புதலளிக்க மறுத்தனர்.
அரசமைப்பு சட்ட 200வது பிரிவில் சட்டப்பேரவை அனுப்பிய சட்டவரைவுகளுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முடிவெடுக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஒப்புதலளிக்க மறுத்தால் பேரவையையே மறுபரிசீலனை செய்ய ஆளுநர் கேட்டுக் கொள்ள வேண்டும். மீண்டும் பேரவை அதே சட்டவரைவை நிறைவேற்றினால் கட்டாயம் ஒப்புதலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கருத்தை தெரிவிக்காமல் ஆளுநர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் சட்ட வரைவுகளை தங்களது காலுக்கடியில் வைத்துக் கொண்டனர்.
இந்த நாடகத்தைப் பார்த்த உச்சநீதிமன்றம் ஒன்று ஆளுநர்கள் தங்கள் கருத்தை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். காலவரையறையின்றி கிடப்பில் போடமுடியாது என்று இந்த வரலாற்று சிறப்பான தீர்ப்பில் குறிப்பிட்டார்கள். இரண்டு வருடங்களுக்கு மேல் தாமதப்படுத்திய சட்டவரைவுகளை மீண்டும் அவர்களது ஒப்புதல் கையெழுத்துக்கு அனுப்புவது தேவையற்ற நடைமுறை என்பதனால் உச்சநீதிமன்றமே ஒப்புதலளித்தது. மேலும் எதிர்காலங்களில் இதுபோன்ற சட்டவரைவுகளுக்கு மூன்று மாதங்களுக்கு மேல் தாமதம் ஏற்படுத்த முடியாது என்று கால வரையறையை நிர்ணயித்துள்ளது.
ஒரு நீதிமன்றம் குடியரசுத் தலைவர் சட்டவிரோதமாக செயல்படுவதை தடுப்பது குடியாட்சிக்கு அச்சுறுத்தல் அல்ல மாறாக குடியாட்சி செயல்படுகிறது என்பதைத்தான் அது உணர்த்தும். அறிவிலிகள் அறிவார்களா?