ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கு ஏன் உத்தரவிடக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கு ஏன் உத்தரவிடக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் பாலக்காடு – கோயம்புத்தூர் இடையே ரயில் மோதி யானைகள் இறப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 9,10 ஆகிய தேதிகளில் நேரில் ஆய்வு செய்யப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குன்னூர் வனப்பகுதியில் 100 மீட்டர் அளவிற்கு யானை வழித்தடம் அடைக்கப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், அவ்வழியே சென்ற யானைகள் கீழே சறுக்கி விழுவது போன்ற காணொளி வெளியானது.

இதையடுத்து வனவிலங்குகளை பாதுகாக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாகு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உயர் நீதிமன்ற உத்தரவு படி இயற்கைக்கு மாறாக யானைகள் இறப்பு, ரயில்களில் மோதி யானைகள் இறப்பு ஆகியவற்றை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கபட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், மாவட்ட ஆட்சியர், வனம், ரயில்வே, நெடுஞ்சாலை ஆகிய அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். இக்குழு கடந்த 22 ஆம் தேதி சம்பந்தப்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வை நடத்தியது. யானைகள் வழித்தட பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் எனவும் இது தொடர்பாக எடுக்கபட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விரிபான பதிலை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

வன பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பான இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி நீதிபதிகள் முன்பு காண்பிக்கப்பட்டது.

இதைப் பார்த்த நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா, மலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை ஏன் மூடுவதற்கு உத்தரவிடக்கூடாது என கேள்வி எழுப்பினார்.
இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் கடுமையான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க நேரிடும் எச்சரித்தனர். வனம், மலைப்பகுதிகளில் மது பாட்டில்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, அப்பகுதியில் மாற்று வழியில் மது விற்பனைக்கு செய்ய ஏதேனும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 9, 10 ஆகிய இரு நாள்கள், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் வழக்குரைஞர்கள் செல்வேந்திரன், சீனிவாசன் ஆகியோருடன் நாங்களும் (நீதிபதிகள்) நேரில் ஆய்வு செய்வோம் என உத்தரவிட்டனர். அன்றைய தினம் மதுபாட்டில்கள் விற்பனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு உரிய விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...

Call Now ButtonCALL ME