Madras hc news

[9/13, 12:06] Sekarreporter: விமானங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் வழங்க முடியுமா மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க மத்திய விமான போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், அவசர காலங்களில் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், விமானத்தில் இருந்து தப்பிக்க அவசர வழி எங்கிருக்கிறது, ஆக்ஸிஜன் குறைபாட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் தற்காலிக ஆக்சிஜன் முகக் கவசம் பயன்படுத்தும் முறைகள், சீட் பெல்ட் அணியும் முறைகள், நீர் நிலைகளில் விழுந்தால் தப்பிக்க விமானத்தில் அதற்கான பிரத்யோக ஆடைகள் இருக்கும் இடம் மற்றும் அணியும் முறை குறித்த செயல்முறை விளக்கங்கள் மற்றும் விளக்க கையேடு ஆகியவை விமானம் புறப்படுவதற்கு முன்பாக வழங்கபட்டு வருவதை குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு தற்போது வெளியிடப்படும், கொடுப்படும் அறிவிப்புகள் தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வழங்கப்படுவதாகவும், நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீத மக்கள் மட்டுமே ஆங்கிலமும், இந்தியும் தெரியாதவர்கள் தெரிந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அவசர காலத்திற்கான இன்றியமையாத விளக்கங்கள் மக்களுக்கு புரிகிற மொழியில் இருக்க வேண்டும் என்பதால், பயணிகள் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு அறிவிப்புகள் மற்றும் விளக்க கையேடுகளை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 8 ல் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அசாமி, குஜராத்தி, பெங்காலி, காஷ்மீரி, உள்ளிட்ட 23 மொழிகளிலும் வழங்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

இந்திய நிறுவனங்களால் நடத்தப்படும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட், கோ ஏர், இண்டிகோ, ஏர் ஏசியா மற்றும் டாட்டா விஷ்ட்டா ஆகிய விமானங்களில் இதை அமல்படுத்துவதுடன், விமானம் புறப்படும் மற்றும் விமானம் சென்றடையும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் அறிவிப்புகள் வெளியிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனுதாரர் விமான போக்குவரத்து துறையின் செயலாளருக்கு 4 வாரங்களில் புதிதாக மனு அளிக்க உத்தரவிட்டு, மனுதாரரின் யோசனையை பரீசிலித்து 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
[9/13, 12:20] Sekarreporter: தொடர் விபத்துகள் நடைபெறுவதால் ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்வீராணம்
கிராமத்தையொட்டிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க கோரிய வழக்கில்,
மனுதாரரின் கோரிக்கையை 8 வாரத்திற்குள் பரிசீலித்து தகுந்த முடிவை அறிவிக்க நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்வீராணம் மோட்டூர் பகுதியை சேர்ந்த வேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில்,
தங்கள் கிராமமான கீழ்வீராணத்தின் அருகாமையில் காவேரிப்பாக்கம் முதல் சோழிங்கர் செல்வதற்கான மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளதாகவும்,
செங்குத்தான வளைவுகள் உள்ளதாலும், நெடுஞ்சாலை என்பதாலும் வாகனங்கள்
அதிவேகமாக செல்வதாகவும், ஏராளமான மணல்,செங்கல் லாரிகளும், தொழிற்சாலை வாகனங்களும் தொடர்ந்து செல்லும் இப்பகுதியில் , வேகத்தடை இல்லாததால் (speed breakers) தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்..

அரசு ஆரம்பப் பள்ளிக்கு செல்ல குழந்தைகளும், தண்ணீர் எடுத்து வர பெண்களும் சாலையை கடக்க வேண்டியுள்ளதாகவும், அவ்வழியே நடக்கும் பாதசாரிகளும், பொதுமக்களும் இத்தகைய வாகனங்களின் அதிவேக போக்கால் விபத்துக்கு உள்ளாவதாகவும்
சுட்டிக்காட்டியுள்ளார்

ஏற்கனவே இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறைக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றம் தலையிட்டு வேகத்தடை அமைக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஏன் அப்பகுதியில் வேகத்தடை வேண்டும் என்பதற்கான உரிய காரணங்களை மனுதாரர் தொகுத்து நான்கு வாரங்களுக்குள்
நெடுஞ்சாலை துறையின் அரக்கோணம் கோட்ட உதவி பொறியாளரிடம் மனுவாக அளிக்குமாறும், அதனை 8 வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த பதிலை சம்மந்தப்பட்ட அதிகாரி மனுதாரரிடம் தெரிவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்..
[9/13, 12:20] Sekarreporter: சென்னை மதுரவாயல் – வாலாஜா நெடுஞ்சாலையில்  உள்ள இரு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே நீதிமன்ற உத்தரவுப்படி வசூலிக்கப்படுகிறது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை மதுரவாயல் – வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காதது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டும் வசூலிக்க  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டது.

இந்தநிலையில் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு ஆஜரான தேசிய நெடுஞ்சாலை துறை வழக்கறிஞர் கார்த்திகேயன், வாலாஜா சாலையில் சாலை சீரமைப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சுங்க சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்… எனவே இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு இந்த மாத இறுதியில் இந்த வழக்கு விசாரணை எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
[9/13, 15:42] Sekarreporter: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும், அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கட்டிடங்கள், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகம் முழுவது உள்ள 49,500 அரசு கட்டிடங்களில் 26,769 கட்டிடங்களில் நுழைவு வாயில்களில் சாய்தளம் மற்றும் கைப்பிடி அமைக்கப்பட்டுள்ளதாகவும், 21,063 கட்டிடங்களில் மாற்றுத் திறானாளிகள் செல்லக்கூடிய வகையில் வாகன வசதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அமைக்கபட்டுள்ளதாகவும், அதேபோல், 1029 கட்டிடங்களில் பிரெய்லி முறையில் லிப்டுகள் அமைக்கபட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்படிருந்தது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் 54 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2017ல் கொண்டுவருவதற்கு முன்புள்ள, 45 சதவீத கட்டிடங்களை பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவண்ணம் வசதிகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும், சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிபந்தனையின் படி இந்த அனைத்து பணிகளும் 2022 ஜூன் 15ம் தேதிக்குள் வசதிகள் ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துகுமார், அனைத்து அரசு கட்டிடங்களிலும், அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கபட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டில் மாற்றுதிறனாளிகள் அணுக முடியாத அளவிற்கு எந்த கட்டிடங்களும் இருக்காது என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வசதிகளை அடுத்த ஆண்டிற்கு ஏற்படுத்தவேண்டும் எனவும், தவறினால் சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
[9/13, 16:03] Sekarreporter: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மதிப்பீடு செய்ய இரு மதிப்பீட்டாளர்களை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, வீரசோழபுரம், அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், ஆட்சியர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்டோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே உறுதி அளித்தபடி, கோவில் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கவில்லை எனவும், தொகுப்பு நிதி உருவாக்கப்படவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நிலத்தை மதிப்பீடு செய்வதற்காக சுதந்திரமான மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, குழந்தை வடிவேல், பெரியசாமி ஆகிய இரு மதிப்பீட்டாளர்களின் பெயர்களை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பரிந்துரைத்தார். அதேபோல கோவிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

அவர்கள் இருவரையும் மதிப்பீட்டாளர்களாக நியமித்து, கோவில் நிலத்தை சுதந்திரமாக மதிப்பீடு செய்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள்,மதிப்பீட்டாளர்களின் அறிக்கையில் திருப்தியடைந்தால் கட்டுமான பணிகளை தொடர அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

மேலும், கோவிலுக்கு விரைந்து அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[9/13, 17:00] Sekarreporter: அதிமுக வில் இருந்து நீக்கப்பட்ட செய்தி தொடர்பாளர்
பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு,
அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

இதுசம்பந்தமான அறிக்கை,
இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நாளை நேரில் ஆஜராக ஒ. பி.எஸ் – இ.பி.எஸ் க்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது

ஆப்போது அதிமுக
ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்,

அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,
நிர்வாகிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஏராளமான புகார்களின் அடிப்படையிலும்,
புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதற்கு கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்

தவறு செய்த ஒரு ஊழியரை நீக்கியதற்காக ஒரு தனியார் நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், அப்படி யாராவது அவதூறு வழக்கு தொடர முடியுமென்றால் ஆயிரக்கணக்கான அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் என தெரிவித்தார்

கட்சியின் உறுப்பினர்களுக்கு ஒருவர் நீக்கப்பட்டது குறித்து தெரிவிக்க வேண்டியது கடமை என்ற அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்த அவர்,
இதில் அவதூறுக்கு என்ன முகாந்திரம் உள்ளதென கேள்வி எழுப்பினார்

கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ஏ. நடராஜன்,

புகாரில் அவதூறுக்கான எந்த சாரம்சமும் இல்லை எனவும், கட்சியின் விதிகளை பின்பற்றாத உறுப்பினர் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கட்சியில் இருந்து நீக்கவும் தலைமைக்கு முழு அதிகாரம் உள்ளதென தெரிவித்திருந்தார்

கட்சியில் இருக்கும் ஒருவரை புகாரின் அடிப்படையில் கட்சியை விட்டு நீக்கினால் அது அவதூறாகுமா என கேள்வி எழுப்பியிருந்த அவர்,புகழேந்தியை
கட்சியில் இருந்து நீக்குவது முதல் முறையல்ல எனவும்,
கடந்த 2017 ல் ஏற்கனவே ஒரு முறை கட்சியில் இருந்து நீக்கிய போதும் இதே போன்ற வாரத்தைகளை பயன்படுத்தி தான் அறிக்கை வெளியிடப்பட்டதாகவும்,
எந்த கட்சியும் ஒருவரை நீக்கினால் இதே போன்ற வாரத்தையை தான் பயன்படுத்தும் எனவும்
தெரிவித்திருந்தார்

இன்று புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத்,

தன்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை எனவும்,
பதில் அளிக்க வாய்ப்பு வழங்கப்படாமல், காரணமின்றி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்

ஒ.பி.எஸ் – இ.பி. எஸ் வெளியிட்ட அறிக்கையில்,
விடுவிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், நீக்கம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளதாகவும்,இதில் அவதூறு வழக்குக்கு முகாந்திரம் உள்ளதாகவும் எடுத்துரைத்தார்

இந்த அறிவிப்பால் தனது மானம்,மரியாதை,கவுரவம் போய்விட்டதாகவும்,
சொந்த கட்சிக்காரர், மாற்றுக் கட்சியினர், உறவினர்கள் என யாரும் தன்னை மதிப்பதில்லை எனவும், தன்னை அசிங்கப் படுத்தியுள்ளதாகவும்,
தவறு செய்து விட்டீர்களா என மற்றவர் கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும்,
இதில் அவதூறு உள்ளதா இல்லையா என்பதை கீழமை நீதமன்ற விசாரணையில் தான் முடிவெடுக்க முடியும் என சுட்டிக்காட்டினார்

அனைத்து தரப்பு வாதங்களை தொடர்ந்து,
வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நீதிபதி,அதுவரை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக ஒ.பி.எஸ் – இ.பி.எஸ் க்கு விலக்களித்து உத்தரவிட்டுள்ளார்
[9/13, 17:34] Sekarreporter: திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருமண மண்டபம் விதிகளுக்கு உட்பட்டு தான் கட்டபடுகிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே பணி முடிப்பு சான்றிதழ் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் அமைந்துள்ள சைவ சமய அறக்கட்டளையான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதின மடத்துக்கு சொந்தமாக திருக்கடையூரில் 14 ஆயிரம் சதுர அடியில் திருமண மண்டபம் கட்டபட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமசந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு புறம்போக்கு நிலங்களில் இந்த திருமண மண்டபம் கட்டபடுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தருமபுர ஆதீனம் தரப்பில், அனைத்து அனுமதியும் பெற்றுதான் திருமண மண்டபம் கட்டபடுவதாக தெரிவிக்கபட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறப்பட்டு திருமண மண்டபம் கட்டுப்படுகிறதா என்பதை கிராம தனி அலுவலர் கண்காணிக்க வேண்டுமெனவும், விதிகளுக்கு உட்பட்டும், அனுமதிக்கு உட்பட்டு தான் கட்டபடுகிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே பணி முடிப்பு சான்றிதழ் வழங்கவேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
[9/13, 21:01] Sekarreporter: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது. பின்னர் இதுதொடர்பாக மனித உரிமை ஆணைய புலனாய்வுப்பிரிவு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த வழக்கை முடித்து வைத்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி மதுரையை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான ஹென்றி டிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தேசிய மனித உரிமை ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீலிடப்பட்ட அறிக்கையை வெளியிட வேண்டும், என கோரப்பட்டது.
தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது, என சுட்டிக்காட்டினர்.
இந்த அறிக்கை நகலை, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும், மனுதாரருக்கும் வழங்க மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கையை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என அறிவுறுத்தினர்.
மேலும், கடந்த 2018-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்றும், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு நிர்வாகத்தில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது என்றும், மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தனர். அத்துடன் தேசிய மனித உரிமை ஆணைய பரிந்துரைப்படி, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும், என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், சிபிஐ விசாரணை மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை, தேசிய மனித உரிமை ஆணைய புலன் விசாரணைக்குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

You may also like...

Call Now ButtonCALL ME