25 years jail chennail mahila court order

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமி சென்னை கோயம்பேடு பகுதியில் லோடுமேனாக உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அண்ணன் மகள் என்றும் பாராமல் அந்த சிறுமியை, அவரது சித்தப்பா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். நடந்த சம்பவத்துக்கு நான் தான் காரணம் என வெளியே சொன்னால் உன்னையும், உனது பெற்றோரையும் கொலை செய்து விடுவேன் என அந்த நபர் மிரட்டியதால் அந்த சிறுமி பயத்தில் நடந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் சொல்லாமல் மறைத்து்ள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், உனது கர்ப்பத்துக்கு யார் காரணம் எனக்கேட்டு சித்தப்பா அந்த சிறுமியை தாக்கி சம்பவத்தை திசை திருப்ப முயன்றுள்ளார். காவல் ஆய்வாளர் உமாதேவி அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தனது கர்ப்பத்துக்கு தனது சி்த்தப்பா தான் காரணம் என தெரிவித்துள்ளார். அதையடுத்து போலீஸார் சிறுமியின் சித்தப்பாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.பத்மா முன்பாக நடந்தது. அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி, 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது அந்த சிறுமி கர்ப்பமடைந்ததால் அவரது எதிர்காலம் பாழாகி விட்டதாகவும், வழக்கு விசாரணையின்போது அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததால், அந்த குழந்தை குழந்தைகள் நலக்குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி எஸ்.பத்மா பிறப்பித்த உத்தரவி்ல், இந்த வழக்கில் அந்த சிறுமியின் சொந்த சித்தப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார். எனவே குற்றம் சாட்டப்பட்ட அந்த லோடுமேனுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கிறேன். தமிழக அரசு ரூ. 3 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி இந்த பிரச்னையால் தடைபட்டுப்போன 10-ம் வகுப்பு தேர்வை மீண்டும் எழுதும் வகையிலும், குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ. 5 லட்சம் மற்றும் இழப்பீடு ரூ. 3 லட்சம் சேர்த்து மொத்தம் ரூ. 8 லட்சத்தை அந்த சிறுமியின் பெயரில் 5 ஆண்டுகளுக்கு வங்கியில் டிபாசிட் செய்யும் வகையிலும், அந்த சிறுமியின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் வகையிலும் பாதுகாப்பு நபராக தொண்டு நிறுவன நிர்வாகி ஒருவரையும் நியமிக்கிறேன், என தீர்ப்பளித்துள்ளார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com