மீரா ஆறுமுகம், வழக்கறிஞர். அன்பார்ந்த அனைவருக்குமென் காலை வணக்கங்கள்! அறிவோமா ஆன்மீகத்தில் இன்று. #திருச்சி_உச்சி_பிள்ளையார் #தலச்சிறப்பு_தலவரலாறு

மீரா ஆறுமுகம், வழக்கறிஞர்.
அன்பார்ந்த அனைவருக்குமென் காலை வணக்கங்கள்!
அறிவோமா ஆன்மீகத்தில் இன்று.
#திருச்சி_உச்சி_பிள்ளையார்
#தலச்சிறப்பு_தலவரலாறு

இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.

சுவாமி : உச்சி பிள்ளையார், தாயுமானசுவாமி, மாணிக்க விநாயகர்.
அம்பாள் : மட்டுவார்குழலி.
தீர்த்தம் : காவிரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம்

தலச்சிறப்பு :
இக்கோவிலில் பங்குனி மாதம் 3 நாட்கள் மாலையில் சிவலிங்கம் மீது, சூரிய ஒளி விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும். மலைக்கோட்டை உச்சியில் உச்சி விநாயகரும், மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளியிருப்பது மிக சிறப்பு.
பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.

தல வரலாறு :
அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப் பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான். எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான்.

அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.
திரும்பி வந்த விபீஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார். சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த விபீஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான் என்பது வரலாறு.

தாயுமானசுவாமி உருவான கதை :

இப்பகுதியில் வாழ்ந்த இரத்தினாவதி என்ற பெண்மணி தாயாகும் பேறு பெற்றாள். காவேரி ஆற்றின் மறு கரையில் இருக்கும் தன் தாய்க்கு செய்தி சொல்லி விட்டு காத்திருக்கிறாள். ஆற்றில் வெள்ள பெருக்கு இருந்ததால் தாயால் வர முடியவில்லை. பிரசவ வேதனை அதிகமாக இம்மலையில் இருக்கும் ஈசனை வேண்டினாள்.ஈசனே தாய் வேடத்தில் அங்கு வந்து அவளுக்கு சுகப்பிரசவம் அடைய உதவினார்.நிஜ தாய் வந்த பின்பு தான்,இறைவனே வந்து பிரசவத்திற்கு உதவியது புரிந்தது. மட்டுவார் குழலம்மையுடன் இறைவன் அனைவருக்கும் காட்சி தந்தார். எனவே இறைவன் தாயுமானசுவாமி என அழைக்கப்படுகிறார்.

You may also like...