மாணவரிடமிருந்து கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டுமென தனியார் பொறியியல் கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவரிடமிருந்து கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டுமென தனியார் பொறியியல் கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அசோக் குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் (ராஜலட்சுமி) பொறியியல் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்ந்தபோது, கல்விக் கட்டணமாக 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணத்தை வங்கியின் கல்வி கடன் மூலம் செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதாலும், குடும்பத்தில் முதல் பட்டதாரி என்பதாலும் அரசின் உதவித் தொகையும் கல்லூரிக்கு நேரடியாக செலுத்தப்பட்ட நிலையிலும், தன்னிடம் கல்லூரி நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

படிப்பை முடித்த பின்பு சில ஆண்டுகள் வங்கியில் பெற்ற கல்வி கடனை செலுத்தி வந்து நிலையில், மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பாக்கி உள்ளது என வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் கல்லூரியை நாடியபோது ஒவ்வொரு வருடமும் கல்விக் கட்டணத்தில் அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்ததாகவும், பொறியியல் கல்லூரி கல்வி கட்டணத்தை வசூலிப்பதை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளபோதும், அதனை பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்த ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி உயர் கல்விதுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் வசூலித்த கூடுதல் கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளருக்கும், மனுதாரரிடம் இருந்து வசூலித்த கூடுதல் கல்வி கட்டணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

You may also like...

Call Now ButtonCALL ME