மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய எட்டு பேருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய எட்டு பேருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை கே.கே. நகரை சேர்ந்த மருத்துவர் இளங்கோவன் என்பவரின் வீட்டுடன் இணைந்திருந்த அவரது மருத்துவமனைக்கு, கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிகாலை நேரத்தில் நோயாளி போல நடித்து மருத்துவமனைக்குள் நுழைந்த கும்பல் இளங்கோவனையும், அவரது குடும்பத்தினரையும் கடுமையாக தாக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி உரிமையாளர் ராதாகிருஷ்ணனின் மகன் கோகுல், அலெக்ஸ், அறிவழகன் உள்ளிட்ட 8 பேரை கே.கே. நகர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முத்துக்குமரன் மருத்துவமனையின் டீன் ஆக இளங்கோவன் பணியாற்றி வந்தபோது, கோகுலுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்க மாரியப்பன் அளித்துள்ள தீர்ப்பில், கோகுல் உள்ளிட்ட எட்டு பேர் மீதான குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, அனைவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் எட்டு பேருக்கும் சேர்த்து 48 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதில் 30 ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட மருத்துவர் இளங்கோவனுக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...