பரோல். வழக்கு

தாம்பத்ய உரிமைக்காக கைதிகளுக்கு பரோல் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள தனது கணவருக்கு கருத்தரிப்பு சிகிச்சைக்காக பரோல் வழங்கக் கோரி அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே கருத்தரிப்பு சிகிச்சைக்காக இரு வாரங்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க சிறை விதிகள் வகை செய்யவில்லை என்பதால் இதுகுறித்து விரிவான தீர்ப்பு வழங்கும் வகையில், வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு விசாரணைக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து 2019ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதன்படி, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முழு அமர்வு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து தீர்ப்பளித்துள்ளது.

தண்டனைக் கைதி ஒருவர், சாதாரண பொதுமக்கள் அனுபவிக்கும் சுதந்திரங்களை அனுபவிக்க அனுமதிக்க முடியாது என்றும், அப்படி அனுமதிப்பது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் குடிமக்களுக்கும், சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் எனச் சுட்டிக்காட்டி, கைதிகளுக்கு தாம்பத்ய உரிமையை வழங்க முடியாது என முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அசாதாரண காரணங்களுக்காக பரோல் வழங்க விதிகள் வகை செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குழந்தைகள் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கைதிக்கு கருத்தரிப்பு சிகிச்சை பெற பரோல் வழங்கலாம் என்றும், ஏற்கனவே குழந்தைகள் இருந்தால் இந்த காரணத்தை கூறி பரோல் கோர முடியாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

You may also like...