பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளது

பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி விளையாடி, அதை யூ டியூபில் பதிவேற்றம் செய்ததாக பப்ஜி மதன், அவரது மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது.

விசாரணையில், கொரோனா நிவாரண நிதிக்காக பல நபர்களிடம் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் பணம் வசூலித்து, அதை மோசடி செய்து சொகுசு கார்கள், நகைகள் வாங்கியது தெரிய வந்தது.

இதையடுத்து, பப்ஜி மதனின் கோடாக் மஹேந்திரா வங்கிக் கணக்கும், கிருத்திகாவின் ஆக்சிஸ் வங்கி கணக்கும் முடக்கப்பட்டன.

இந்நிலையில் சட்டவிதிகளின்படி வங்கிக் கணக்கு முடக்கம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி, முடக்கத்தை நீக்க கோரி பப்ஜி மதனின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, வங்கிக் கணக்கை குறுகிய காலத்துக்கு தான் முடக்க முடியும் எனவும், நீண்ட காலத்துக்கு கணக்கை முடக்கி வைப்பது தனது சட்டப்பூர்வ உரிமையை பாதிக்கிறது எனவும் வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து எந்த நோட்டீஸ் எதுவும் அளிக்கவில்லை என கிருத்திகா தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், சட்டப்படி வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் உள்ள ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் யாருக்கு சொந்தமானது என்பது சாட்சி விசாரணைக்கு பின் தான் தெரியவரும் என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து புலன் விசாரணை அதிகாரி முன் கூட்டி நோட்டீஸ் அனுப்பினால் அது ஆதாரங்களௌ அழிக்க வழி வகுத்து விடும் என்பதால், முடக்கம் குறித்து நோட்டீஸ் அளிக்க அவசியமில்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், வழக்கின் புலன் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க கோரி சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் எனவும், மனுதாரர் மற்றும் காவல் துறையின் வாதங்களை கேட்டு, நீதிமன்றம் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்கலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version