படையாண்ட மாவீரா படத்தில், சந்தனக்கடத்தல் வீரப்பனின் தனித்துவமான தோற்றத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி
படையாண்ட மாவீரா படத்தில், சந்தனக்கடத்தல் வீரப்பனின் தனித்துவமான தோற்றத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி, அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு, பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வி.கே.புரடக்க்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் கவுதமன், இயக்கி நடித்துள்ள, படையாண்ட மாவீரா திரைப்படம், இன்று (செப்டம்பர் 19 ம் தேதி) வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கான விளம்பரங்களில், மறைந்த தன் கணவர் வீரப்பனின் தனித்துவமான அடையாளங்களை, தன்னுடைய அனுமதி பெறாமல் பயன்பட்டிருப்பதாகக் கூறி, அவரது மனைவி முத்துலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தன் கணவர் வீரப்பன் சர்ச்சைக்குரிய கடந்த காலத்தைக் கொண்டிருந்தாலும், மறைவுக்கு பின், பல சமுதாய மக்களால் மதிக்கப்பட்டு வருகிறார் என்றும்
அவரது படத்தை காட்சிப்படுத்தி, அதிலிருந்து பணம் ஈட்டுவது பதிப்புரிமையை மீறும் செயல் மட்டுமல்லாமல் முறையற்ற வணிகம் என்பதால், படையாண்ட மாவீரா திரைப்படத்தின் விளம்பரங்களில் இருந்து வீரப்பனின் தனித்துவ தோற்றங்களை நீக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
அதேபோல, வீரப்பனின் தனித்துவ அடையாளங்களை திரைபடங்கள், விளம்பரங்களில் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் முன் விசாரணக்கு வந்தது. அப்போது முத்துலட்சுமி தரப்பில் வழக்கறிஞர் சுவேதா ஆஜராகி, படையாண்ட மாவீரா திரைப்படத்தின் விளம்பரங்களில் இருந்து வீரப்பனின் தனித்துவ அடையாளங்களை நீக்க வேண்டும் என வாதம் வைத்தார்.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி செப்டம்பர் 26 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, பட தயாரிப்பு நிறுவனமான வி.கே.புரடக்க்ஷன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.