நீதிபதிகள், அமலாக்க துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் டிஜிபி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாதது ஏன் என கேள்வி எழுப்பினர்.

நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் 1,020 கோடி ரூபாய் வரை ஊழல் தொடர்பாக அமலாக்க துறை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்கள் நியமனங்களுக்கு 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதால், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல, நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் 1,020 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டி, வழக்குப்பதிவு செய்யக் கோரி அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்குக் அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யுமாறு அதிமுக எம்.பி. இன்பதுரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு மனுக்களும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஆதிநாராயணன் வழக்கில் தமிழக அரசு தரப்பில், அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தை டிஜிபி அரசுக்கு அனுப்பி வைத்தார். விரிவான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது விசாரணை நடந்து வருகிறது. விசாரணையை முடிக்க 180 நாட்கள் அவகாசம் உள்ளது. இந்த விவகாரத்தில் நேரடியாக வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பில்லை. மனுதாரருக்கு எதிராக 25 வழக்குகள் உள்ளன. அதில் ஆறு வழக்குகள் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் என தெரிவிக்கப்பட்டது.

வழக்கு தாக்கல் செய்துள்ள இருவரில் ஒருவர் அரசியல்வாதி என அரசு தலைமை வழக்கறிஞர் ராமன் குறிப்பிட்ட போது, அரசியல் வாதிகள் வழக்கு தொடரக்கூடாதா? மக்கள் பிரதிநிதிக்ள் கூட பொதுநல வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்து அமலாக்க துறை தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ், டிஜிபிக்கு வெறும் தகவல் மட்டும் அனுப்பி வைக்கவில்லை. ஆதாரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனால் ஆரம்பகட்ட விசாரணை நடத்தாமல் நேரடியாக வழக்குப்பதிவு செய்யலாம். மேல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி கடிதம் அனுப்பிய நிலையில், நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்றார்.

டிஜிபி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் கபூர் சவுத்ரி, இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அடிப்படை உரிமை இல்லை. இருவரின் நம்பகத்தன்மையை ஆராய வேண்டும். எந்த வழக்கின் சோதனையில் ஆதாரங்கள் கிடைத்ததாக அமலாக்க துறை கூறுகிறதோ, அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டது எனக் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமலாக்க துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் டிஜிபி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாதது ஏன் என கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, அரசு பதில் மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆதிநாராயணன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இன்பதுரை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், டி.ஜி.பி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, இரு வழக்குக்ளின் விசாரணையை பிப்ரவரி 4 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version