தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர மோகன் அமர்வு, எந்த கோவிலுக்கு, எந்த சட்டவிதியை மீறி நிதி பயன்படுத்தப்பட்டது என்பது

கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி, சட்ட விதிகளை பின்பற்றியே கோவில் நிலத்தில், கோவில் நிதியை பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக, இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

கோவில் நிலங்களில், கோவில் நிதியில், திருமண மண்டபங்கள், கலாச்சார மையங்கள், நிர்வாக கட்டடங்கள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பணிகளில் தற்போதைய நிலை நீடிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. 23 ஆயிரம் கடைகள், 76 ஆயிரத்து 500 கட்டுமானங்கள் உள்ளன. இவற்றின் மூலம், 2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான ஓராண்டு காலத்தில் 345 கோடி ரூபாய் குத்தகை வருமானம் வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பாசன வசதி இல்லாததாலும், நகர்மயமாதல் காரணமாகவும் பெரும்பாலான நிலங்கள் எந்த வருவாயும் ஈட்டுவதில்லை. இந்த நிலங்களில் திருமண மண்டபங்கள், அரங்கங்கள், கடைகள் கட்டுவதன் மூலம் கோவிலுக்கு வருவாய் கிடைக்கும் என்பதாலும், ஆக்கிரமிப்புகளில் இருந்து அவற்றை பாதுகாக்க முடியும் என்பதாலும், கட்டுமானங்கள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையில், உரிய அனுமதிகளைப் பெற்ற பிறகே இந்த கட்டுமானங்கள் கட்டப்படுவதாகவும், சட்ட விதிகளின்படி இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கோவில் நிலங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள, கோவில் உபரி நிதியை பயன்படுத்த கூடாது என எந்த சட்டப்பிரிவும் தெரிவிக்கவில்லை என்பதால், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க வேண்டும் என பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர மோகன் அமர்வு, எந்த கோவிலுக்கு, எந்த சட்டவிதியை மீறி நிதி பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விளக்கமனு தாக்கல் செய்யும்படி மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைத்தது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com