தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட அந்த நீர்நிலை நிலத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளதாகவும், ஒரு பகுதி நிலம் ஏற்கனவே நத்தம் நிலமாக மறுவகை செய்யப்பட்டதால், தங்களுக்கு பட்டா வழங்கும் வகையில் நிலத்தை கிராம நத்தம் நிலமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

கால்வாய், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்க ஏதுவாக, அந்நிலங்களை கிராம நத்தம் உள்ளிட்ட நிலங்களாக மறுவகைப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள நரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள வாய்க்கால் புறம்போக்கு நிலத்தை, கிராம நத்தமாக வகைமாற்றம் செய்து தங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த சசிகலா, தினேஷ் உள்ளிட்ட 65 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட அந்த நீர்நிலை நிலத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளதாகவும், ஒரு பகுதி நிலம் ஏற்கனவே நத்தம் நிலமாக மறுவகை செய்யப்பட்டதால், தங்களுக்கு பட்டா வழங்கும் வகையில் நிலத்தை கிராம நத்தம் நிலமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கனவே நத்தம் நிலமாக மறுவகைப்படுத்தி அரசு செய்த சட்ட்விரோத நடவடிக்கையின் அடிப்படையில் மறுவகைப்படுத்த மனுதாரர்கள் கோர முடியாது எனத் தெரிவித்தனர்.

மேலும், தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால் ஒருபுறம் வெள்ள பாதிப்புகளும், கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர் செல்ல முடியாத நிலையில் வறட்சி ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் அந்த நிலத்தை மறுவகைப்படுத்த கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...