தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை

கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலுார், மஞ்சக்குப்பம் மைதானத்தில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 14 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், பூங்கா, கடைகள் என, ஒருங்கிணைந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து, கடலுாரைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் இந்த மைதானத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் முன், எவ்வித கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தவில்லை.
மைதானத்தை, வணிக பயன்பாட்டுக்கு மாற்றுவது தொடர்பாக எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என்பதால், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மஞ்சக்குப்பம் மைதானம் பகுதியில் கடைகள், மாநாட்டு அரங்கு பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, இந்த மைதானத்தில் நிரந்தர கட்டுமானங்களுக்கு தடை விதித்து 1991 ம் ஆண்டு பிறபிக்கப்பட்ட உத்தரவைச் சுட்டிக்காட்டி, மஞ்சக்குப்பம் மைதானத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் இந்த மனுவுக்கு டிசம்பர் 17ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, கடலுார் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com