தமிழகத்தில் தண்ணீர் மாபியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை கருத்து



தமிழகத்தில்
தண்ணீர் மாபியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை கருத்து

சென்னை, டிச.11-
தமிழகத்தில் மணல் மாபியாக்களை போல தண்ணீர் மாபியாக்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருவதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனையுடன் கருத்து
தெரிவித்து உள்ளனர்.
தண்ணீர் திருட்டு
ஆவடிக்கு அருகே உள்ள கோனாம்பேடு பகுதியில் உள்ள நீர்நிலைகளை பலர்
ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதாகவும், அங்குள்ள குளங்களில் இருந்து
சட்டவிரோதமாக டேங்கர் லாரிகள் மூலமாக தண்ணீர் திருடப்படுவதாகவும், இதனால்
நிலத்தடி நீர் வற்றிபோவதாக சென்னை ஐகோர்ட்டில் கோனாம்பேடு கிராம பொதுநலச்
சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும் அந்த வழக்கு மனுவில், ‘நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை
அகற்றவும், தண்ணீர் திருட்டை தடுக்கவும் தகுந்த உத்தரவை
பிறப்பிக்கவேண்டும்’ என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கோனாம்பேடு கிராமத்தில் உள்ள
நீர்நிலைகளை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய
திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.
தண்ணீர் மாபியா
ஆனால், இந்த உத்தரவை அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை என்று கூறி
சென்னை ஐகோர்ட்டில் கோனாம்பேடு கிராம பொதுநலச்சங்கம் சார்பில் கோர்ட்டு
அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன்,
பி.வேல்முருகன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, நீதிபதிகள்,
தமிழகத்தில் மணல் மாபியா போல தண்ணீர் மாபியாக்களின் எண்ணிக்கையும்
தற்போது அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் தண்ணீரை சேமித்து வைக்க போதிய
உள்கட்டமைப்பு வசதிகள் இதுவரை இல்லை. தற்போது சுதாரித்து விழித்துக்
கொள்ளவில்லை என்றால் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட
கிடைக்காமல் கடும் அவதிப்படும் சூழல் ஏற்படும்’ என்று வேதனையுடன் கருத்து
தெரிவித்தனர். பின்னர், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கிற்கு 2
வாரத்துக்குள் பதில் அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
அனுப்ப உத்தரவிட்டனர்.
…………………….



You may also like...