தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய
தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலர் மயூரா ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு, காவல்துறை பதிலளிக்க,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலர் கே.சி.வேணுகோபால். இவர், கடந்தாண்டு நவ.17ல், கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவை வழியாக, மும்பை செல்வதற்காக, கோவை விமான நிலையம் வந்தார்.
அவரை வழியனுப்ப, தேசிய செயலர் மயூரா எஸ்.ஜெயக்குமார் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகளும், ஐ.என்.டி.யு.சி., மாநில தலைவர் கோவை செல்வன் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகளும் வந்தனர்.
கோவை செல்வன் தரப்பினர், மயூரா எஸ்.ஜெயக்குமார் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து, பொது செயலர் வேணுகோபாலிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது மயூரா ஜெயக்குமார் மிரட்டல் விடுத்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது.
இது தொடர்பாக, கோவை செல்வன் அளித்த புகாரின் பேரில், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது, ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது, கோவை மாவட்ட நீதிமன்றத்தில், பீளமேடு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மயூரா ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மயூரா ஜெயக்குமார் தரப்பில்,’ இது, ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இடையேயான சாதாரண சண்டைதான். புகாரில் கூறப்பட்டவை மிகைப்படுத்தப்பட்டு உள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்.10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.