தனியார் வன பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில்
தனியார் வன பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில்
கடந்த 1949ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் வனங்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரபட்டது. இந்த சட்டப்பிரிவின்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் அனுமதி இல்லாமல் வனப்பகுதி நிலங்களின் உரிமையாளர்கள், அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்கவோ, குத்தகைக்கு விடவோக்கூடாது என்று கூறுகிறது.
இந்தநிலையில், 2011ல் இந்த சட்டத்தில் புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு திருத்தம் கொண்டு வரபட்டது. அந்த திருத்ததின் படி, குழுவின் முன் அனுமதியோடு வன நிலங்களின் உரிமையாளர்கள், அதை வேறு ஒருவருக்கு விற்கலாம் என்றும், அதனை வாங்குபவர்கள் அந்த வனப்பகுதியை தானே வைத்து கொள்வதற்கு அரசுக்கோ, குழுவுக்கோ விண்ணப்பம் அளித்து அனுமதி பெறுவதற்கும் வகை செய்யபட்டுள்ளது.
இந்த சட்டப்பிரிவை எதிர்த்து சென்னை அண்ணா நகரை சேர்ந்த முருகவேல் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், வனப்பகுதியை சட்டவிரோதமாக வாங்கியவர்கள் குழுவிடம் விண்ணப்பித்து உரிமை பெறுவது என்பது சட்டவிரோத விற்பனைக்கு ஒப்புதல் அளிப்பது போல் இந்த சட்டப்பிரிவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2002ல் 26 சதவீதம் காடுகள் இருந்ததாகவும், தற்போது 20.27 சதவீதமாக சுருங்கி விட்டதாகவும், இந்த சட்ட பிரிவினால் காடுகள் அழிக்கபட்டுவிடும் என்பதால், இந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்த சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 6 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.