தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கான கட்டணத்தை செப்டம்பர் 30 ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கான கட்டணத்தை செப்டம்பர் 30 ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என புதுச்சேரி தலைமை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது…

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என்ற அரசு உத்தரவை மீறி புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டணம் வசூலிப்பதாக ஆனந்த் என்பவர்  தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற  செய்த செலவு தொகையை சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு 3 மாதங்களில்  வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது..

இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நோயாளிகளுக்கும்,சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைகளுக்கும் சிகிச்சை கட்டணத்தை அரசு  இன்னும் முழுமையாக திரும்ப அளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கட்டணத்தை திரும்பி செலுத்தியது குறித்து  அறிக்கை தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

சிகிச்சைக்கான கட்டணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் தருவதாக அரசு உறுதி அளித்தும் இன்னும் வழங்கமால் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,  செப்டம்பர் 30 ம் தேதிக்குள் சிகிச்சை கட்டணத்தை திரும்ப அளிக்காவிட்டால் ஊதிய பிடித்தம் உள்ளிட்ட  கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளரை எச்சரித்து விசாரணையை தள்ளிவைத்தனர்…

You may also like...