சைபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பப்ஜி மதனுக்கு ஜாமீன் வழங்கினால், மேலும் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்வார் என்பதால், ஜாமீன் வழங்கக்கூடாது என சென்னை சைபர் கிரைம் காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சைபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பப்ஜி மதனுக்கு ஜாமீன் வழங்கினால், மேலும் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்வார் என்பதால், ஜாமீன் வழங்கக்கூடாது என சென்னை சைபர் கிரைம் காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழிக்கு கொண்டு செல்வதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மதன் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தலைமறைவான மதனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவினர் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். பின்னர் சைபர் சட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ஏப்ரல் 25ஆம் தேதியன்று உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மாநகர காவல்துறையின் மத்திய குற்றபிரிவின் சைபர் செல் ஆய்வாளர் டி. வினோத்குமாரின் பதில் மனுவை, அரசு வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ் தாக்கல் செய்தார். அதில், பப்ஜி மதனும், அவரது மனைவியும் பெண்களை ஆபாசமாக விமர்சித்து பேசயுள்ளதாகவும், இதை தினந்தோறும் லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் மக்கள் பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில் அதை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து ஆபாசமாக பேசிக் கொண்டு விளையாடியதன் மூலம் இந்திய இறையாண்மைக்கும், பொது அமைதிக்கும் எதிராக செயல்பட்டுள்ளதாக பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதனின் ஆபாச பதிவுகள் மூலம் பெண்களை இழிவான ஆபாசமான வார்த்தைகளால் பேசி, சிறார்களை தவறாக வழி நடத்தி உள்ளதாகவும், 7 லட்சத்து 70 ஆயிரம் பாலோயர்களில் 13 சதவீதத்தினர் 18 வயதிற்கு கீழானவர்கள் என்றும், 64 சதவீதத்தினர் 24 வயதுக்கு கீழானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதனின் ஆபாச பேச்சுக்களால் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், அவரது வீடியோக்கள் இளைய சமுதாயத்தினரை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பப்ஜி மதனுக்கு ஜாமீன் வழங்கினால் மேலும் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்புள்ளது எனவும், ஏழை மக்களுக்கு உதவி செய்வதாக கூறி, யூடியூபில் அவரை பின்தொடர்பவர்களிடம் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் வரை மோசடியும் செய்துள்ளார் எனவும், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், சைபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மதனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பதில் மனுவுக்கு பதிலளிக்க பப்ஜி மதன் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, மனு மீதான விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜூன் 1ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...