சென்னை ஐகோர்ட் செய்திகள் தமிழ்

[8/4, 07:33] Sekarreporter: தமிழகத்தில் ஆன் லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆன் லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21 ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுதாரர்கள் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால் இந்த விளையாட்டிற்கு தடை விதித்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கபட்டது… ஆனால், ஜல்லிகட்டு போட்டியின் போது ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வரை பலியாவதாகவும், உச்ச நீதிமன்றமும் ஜல்லி கட்டிற்கு தடை விதித்தும், மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் வாதிட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டிற்கு மட்டும் தடை விதித்து சட்டம் இயற்றி உள்ளதாகவும், இது திறமைகளுக்கான விளையாட்டு என்றும் சூதாட்டம் இல்லை எனறும் வாதிட்டனர்.

மேலும், சட்டத்தை இயற்ற முறையாக எந்தவொரு காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், இந்த விளையாட்டால் நிறைய பேர் ஏமாந்து போயுள்ளதாகவும்,, பொது நலனை கருத்தில் கொண்டு இந்த சட்டம் இயற்றபட்டதாகவும், இந்த சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தள்ளிவைத்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, சட்டத்தை ரத்து செய்தனர்.

மேலும், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தனர்.
[8/4, 07:33] Sekarreporter: நாடு முழுவதும் பொருந்தக் கூடிய தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை டில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் பட்டியலிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதற்கும் பொருந்தக் கூடிய அல்லது இரு மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளை டில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் பட்டியலிட வேண்டும் என, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த ஜூன் 12ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மீனவர் தந்தை செல்வராஜ்குமார் மீனவர் நல சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், சுற்றுச்சூழல் தொடர்பான குறைகளுக்கு மக்கள் நிவாரணம் பெறுவதற்காக நாடு முழுவதும் ஐந்து அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, தென் மாநில மக்கள் நீதி பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு காரணமாக குடிமக்கள், டில்லிக்கு பயணப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டங்களுக்கு விரோதமானது என்பதால், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஜூலை 30ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
[8/4, 07:33] Sekarreporter: ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல் வழங்கிய பிறகு, 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை வகுக்கக்கோரி நேர்வழி இயக்கம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரான டி.கணேஷ்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் பி.முத்துக்குமார் ஆஜராகி தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகத்தின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தமிழகத்தில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி தொடங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டம் மத்திய அரசு வகுத்த விதிகளின்படி, சுகாதார துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோரில் தொடங்கி, கடந்த மே மாதம் முதல் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவின்படி, தொற்று பாதிக்க அதிக வாய்ப்புள்ளவர்கள், அத்தியாவசிய சேவை துறைகள், மாற்று திறனாளிகள், தொழில் நிறுவன ஊழியர்கள் என தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 6ஆம் தேதி வரை சுகாதார துறையை சேர்ந்த 8,55,165 பேர், முன்களப் பணியாளர்கள், 11,09,196, 18 முதல் 44 வயது வரையிலான 54,74,237 பேர், 45 முதல் 59 வயது வரையிலான 52,63,657 பேர், 60 வயதிற்கு மேற்பட்ட 3227877 பேர் என 1,59,30,132 பேர் பலனடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 18 வயதிற்கு குறைவான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இதுவரை எந்த வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை என்றும், அவ்வாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்போது, பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கில் பல்கலைகழக மானிய குழுவை எதிர்மனுதாரராக சேர்த்தது போல, இந்திய பார் கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், இந்திய பார்மசி கவுன்சில் ஆகியவற்றையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[8/4, 07:33] Sekarreporter: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பக்தவசல பெருமாள் கோவிலின் தாமிர பட்டயத்தையும், 400 ஏக்கர் நிலத்தையும் மீட்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு நாளை விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்துள்ள பொது நல வழக்கில், திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதுடன், 108 திவ்ய தேசங்களில் ஒன்று என குறிப்பிட்டுள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த விஜயரகுநாத நாயக்கர் என்ற அரசாரால் 1608ஆம் அண்டில் இந்த கோவிலுக்கு 400 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுக்கப்பட்டு, பல்வேறு பூஜைகளும், விழாக்களும் நடத்தப்பட்டதாகவும், 400 ஏக்கர் நிலம் கொடுத்ததற்காக தாமிரப் பட்டயம் எழுதி வைக்கப்பட்டதாகவும், இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அந்த தாமிரப் பட்டயம் சென்னையில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் கோவிலுக்கு திருப்பிகொடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

தாமிர பட்டயம் மாயமானதுடன், தானமாக கொடுக்கப்பட்ட 400 ஏக்கரில் தற்போது கோவிலின் கட்டுப்பாட்டில் 7 ஏக்கர் மட்டுமே உள்ளதாகவும், மீதமுள்ள நிலத்தை கோவில் செயல் அலுவலரால் கண்டறியப் முடியவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

தாமிரப் பட்டயத்தை கண்டுபிடித்து, ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலின் நிலத்தை மீட்க கோரி கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி தமிழ்நாடு அரசு மற்றும் அறநிலையத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவும், நில அளவையரின் உதவியுடன் 400 ஏக்கர் நிலத்தை கண்டறிய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்டதால் வழக்கு நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
[8/4, 07:33] Sekarreporter: அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

பெங்களூரு புகழேந்தியை நீக்கி வெளியிட்ட கூட்டறிக்கையில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அதிமுக செய்தி தொடர்பாளர், கழக புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் புகழேந்தியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக குறிப்பிட்டிருந்தனர்.

தன்னை நீக்கிய உத்தரவில் தன்னை பற்றிய கருத்துக்கள் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அலீசியா முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து ஆஜராகி விளக்களிக்க ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[8/4, 07:33] Sekarreporter: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்களில் சிபிசிஐடி ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி போலீசார் ஜூன் 16ஆம் தேதி டெல்லியில் கைது செங்கல்பட்டு செய்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அமைத்துள்ளனர்.

அவரது இரண்டு ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இரு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், கேளம்பாக்கம் பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள 12 கிரவுண்ட் நிலத்தில் சம்ரக்‌ஷனா அறக்கட்டளையை மட்டுமே நடத்தி வருவதாகவும், ஆன்மீகம் மற்றும் தமிழ் சார்ந்த சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக மட்டுமே கேளம்பாக்கம் பள்ளிக்கு சென்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கும், பள்ளிக்கும் எதிராக புகார் அளித்த பெண், புகார் அளிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அந்த பள்ளியில் நாட்டிய நிகழ்வை நடத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரத்தக்கொதிப்பு, நீரழிவு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் தனக்கு இருப்பதாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூட சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளதாக சிவசங்கர் பாபா குறிப்பிட்டுள்ளார்.

தன் மீதான வழக்கு பொய்யாக புனையப்பட்டது என்பதால், தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஆன்மீக பயணம் செல்வதற்காக டெல்லி சென்ற தன்னை சிபிசிஐடி கைது செய்து ஒவ்வொரு வழக்காக பதிவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

சிவசங்கர் பாபாவின் இந்த ஜாமீன் மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[8/4, 07:33] Sekarreporter: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக இட ஒதுக்கீட்டு சட்டப்படி, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீதிமன்ற அவமதிப்பு ஏதும் செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

ஆனால் தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் குற்றம் சாட்டினார். தமிழக அரசின் இட ஒதுக்கீடை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யவே குழு அமைக்க உத்தரவிடப்பட்டதாகவும், மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் வாதிட்டார்.

தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை புறக்கணிக்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், மத்திய அரசின் குழுவும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன எனத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது மொத்த இட ஒதுக்கீடான 50 சதவீதத்துக்குள் வருகிறதா ? இல்லையா? எனவும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் அவகாசம் வழங்க கோரியதை ஏற்று, வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரம் தள்ளிவைத்தனர்.
[8/4, 07:33] Sekarreporter: பொள்ளாச்சி பாலியல் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்பையும் சிபிஜக்கு வழங்க தயாராக இருப்பதாக தமிழக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் கடந்த ஆண்டு, மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் இருக்கின்றனர். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரித்துவருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவருகிறது.
இந்த நிலையில்
இந்த வழக்கில் ஆச்சிபட்டியைச் சேர்ந்த ஹேரேன் பால், வடுகபாளையத்தைச் சேர்ந்த பாபு என்கிற பைக் பாபு, அருளானந்தம் ஆகியோர் சி.பி.ஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிறையில் இருக்கும் அருளானந்தம், பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளராக இருந்துவந்தவர். இந்த நிலையில் அருளானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது .அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களை கீழ்நீதிமன்றம் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார்.ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார். அப்போது ஆஜராகியிருந்த தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொள்ளாச்சி பாலியல் வழக்கு விரைந்து விசாரித்து முடிக்க அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கி தமிழக காவல்துறையை தயாராக இருப்பதாகவும் குறிப்பாக எஸ்பி அந்தஸ்தில் ஒரு அதிகாரியை நியமித்து உதவ தயார் என்றும் உறுதி அளித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

You may also like...