சிறுமிக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது என்றும் வழக்கில் விரைவில் சாட்சி விசாரணை தொடங்கவுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் உயர்

சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது என்றும் வழக்கில் விரைவில் சாட்சி விசாரணை தொடங்கவுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் தாக்கியது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது.
மேலும், இந்த குழு, தனது விசாரணை அறிக்கையை வாரந்தோறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் சிறுமிக்கு இழப்பீடு வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் முடிவெக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உயர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட அண்ணா நகர் சிறுமிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் இழப்பீடு தொகையுடன் இடைக்கால இழப்பீடாக மேலும் 3 லட்ச ரூபாயை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆ.தாமோதரன் ஆஜராகி, சிறுமிக்கு இதுவரை இடைக்கால இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாட்சி விசாரணை தொடங்கப்படவுள்ளது. இது குறித்து நிலை அறிக்கை தர அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com