சவுடு மண் எடுக்க அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு கனிம வளத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் வண்டல் மற்றும் சவுடு மண் எடுக்க அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு கனிம வளத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பழைய பல்லாவரத்தை சேர்ந்த பி.சசிதரன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் களிமண், சவுடு மண், கிராவல் ஆகியவற்றை எடுக்கக் கூடாது என தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் கடந்த 2017 ஏப்ரல் 27ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருநிலை மற்றும் புதுவயல் கிராமங்களில் உள்ள குளங்களில் சிறு கனிம சலுகை விதிமுறைகளுக்கு முரணாக சவுடுமண், வண்டல்மண் எடுக்க கவுரிசங்கர், முத்துராஜ் ஆகியோருக்கு ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். விதிகளுக்கு முரணாக சவுடு மண், வண்டல்மண் எடுக்க தரப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திருவள்ளூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...

Call Now ButtonCALL ME