சமூக வலைதள பயனாளர்களால் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் பதிவிடப்பட்டால் அவற்றை சமந்தப்பட்ட நிறுவனங்களே நீக்கும் வகையிலும், வெளியீட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சமூக வலைதள பயனாளர்களால் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் பதிவிடப்பட்டால் அவற்றை சமந்தப்பட்ட நிறுவனங்களே நீக்கும் வகையிலும், வெளியீட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக கூறி, அதை தடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் மற்றும் பிரபல பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகளில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு துறை சார்பில் அதன் துணை செயலாளர் அமரேந்தர் சிங் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் செய்திகளை ஒழுங்குபடுத்தவுமே விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஒரு சட்டத்தால் தடை செய்யப்பட்ட விஷயங்களை வெளியிடவோ, பரப்பவோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமை இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, அண்டை நாட்டு உறவை குலைக்கும் தகவலை பகிர்வது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையிலேயே சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஓ.டி.டி. தளங்களில் பதிவேற்றம் செய்பவற்றை 7 மற்றும் 13 வயதினருக்கானது என வகைப்படுத்தி வெளியிட வேண்டும் என விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின் கீழ் மூன்று குறைதீர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நிறுவனமும் குறைதீர் அமைப்புகளை வைத்திருக்க வேண்டும் எனவும், அவை சுய ஒழுங்குமுறை அமைப்பாக இருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திலும் ஒரு குழு இருக்கும் என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுக வலைதளங்கள் மட்டுமல்லாமல், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஆட்சேபனைக்குரிய பதிவை அரசோ அல்லது நீதிமன்றமோ தான் நீக்கும் வகையில் இருந்த விதிகளை மாற்றி, சம்பந்தப்பட்ட வெளியீட்டு நிறுவனங்களே முடக்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி வெளியீட்டாளர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையிலேயே விதிகள் வகுக்கப்பட்டு உள்ளது என்றும் பதில்மனுவில் சுட்டிக்கப்பட்டப்பட்டுள்ளது.

விதிகளை கொண்டுவர அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், அரசியல் சாசன விதிகளை மீறவில்லை என்றும், அதனால் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணையை, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

You may also like...

CALL ME
Exit mobile version