கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்டை அப்புறப்படுத்தி, நான்கு வாரங்களில் நிலத்தை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு judge m sunder j

கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்டை அப்புறப்படுத்தி, நான்கு வாரங்களில் நிலத்தை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம், குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் ரிசார்ட் நடத்தி வருகிறது.

கடந்த 1998ம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிந்த நிலையில், நிலத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததை அடுத்து, 2 கோடியே 75 லட்சத்து 46 ஆயிரத்து 748 ரூபாயை இழப்பீடாக செலுத்தும்படி குயின்ஸ்லேண்ட் நிர்வாகத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் கடந்த 2013ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீசை எதிர்த்து குயின்ஸ்லேண்ட்டை நிர்வகிக்கும் ராஜம் ஹோட்டல்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கடந்த 2013ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 1995 ம் ஆண்டில், சம்பந்தப்பட்ட நிலங்கள் முதலில் செல்வராஜ் என்பவருக்கு, குத்தகைக்கு விடப்பட்டதாகவும், அதைத்தொடர்ந்து வருவாய்த் துறையினர் கோவில் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்ததால் இதைப் பயன்படுத்திக் கொண்டு, குயின்ஸ்லேண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 1998ல் குத்தகை காலம் முடிந்த பிறகும் குயின்ஸ்லேண்ட் ஆக்கிரமித்திருந்ததாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள குயின்ஸ்லேண்ட்டை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து, 4 வாரங்களில் கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் அந்த நிறுவனம் வருவாய் துறைக்கு 1 கோடியே 08 லட்சம் ரூபாயையும், கோவிலுக்கு
9 கோடியே 50 லட்சம் ரூபாயையும் இழப்பீடாக
செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...

CALL ME
Exit mobile version