கோவில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற அறநிலையத் துறைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது

கோவில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற அறநிலையத் துறைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டிபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதுசம்பந்தமாக செப்டம்பர் 22ம் தேதி பிறப்பிக்கப்பட்ட சுற்ரறிக்கையை ரத்து செய்யக் கோரியும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இந்து சமய அறநிலைய சட்டத்தில், கோவிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத் துறை, கோவில் நிர்வாகத்தில் மட்டும் தலையிட முடியுமே தவிர மத வழிபாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது எனவும், வருவாய் ஈட்டுவதற்காக நகைகளை உருக்கி டிபாசிட் செய்வதற்கு பதில், ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம் எனவும் மனுவில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் நகைகள் தொடர்பாக முறையாக எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படாத நிலையில், நகைகளை உருக்கி வங்கிகளில் டிபாசிட் செய்வது கேள்வியை எழுப்பியுள்ளதாகவும், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் நகைகளை உருக்குவது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like...

CALL ME
Exit mobile version