காவல் துறையினருக்கு எதிராக நில அபகரிப்பு புகார் அளித்த சென்னை தொழிலதிபர் ராஜேஷுக்கு எதிரான 17 கோடி ரூபாய் மோசடி புகாரையும் விசாரிக்க சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையினருக்கு எதிராக நில அபகரிப்பு புகார் அளித்த சென்னை தொழிலதிபர் ராஜேஷுக்கு எதிரான 17 கோடி ரூபாய் மோசடி புகாரையும் விசாரிக்க சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை கடத்திச் சென்று, சிறைப்படுத்தி, 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்ததாக திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தன்னை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும், தொழிலதிபர் எனக் கூறிவரும் ராஜேஷுக்கு எதிராக 2019ல் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரியும், அயப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கட சிவநாககுமார் கந்தேட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்தில் திட்ட மேலாளராக உள்ளதாக கூறி, போலி ஆவணங்களை காட்டி, அந்த நிறுவனத்தில் இருந்து பணிகள் பெற்றுத் தருவதாக கூறி, தன்னிடம் 17 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக 2019ல் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜேஷ் தொழிலதிபரே அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

பறிகொடுத்த பணத்தை மீட்க உதவிய காவல் துறையினரை பழிவாங்க புகார் அளித்த ராஜேஷின் செயலை ஊக்குவிக்க கூடாது எனவும் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக காவல் துறையினருக்கு எதிராகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் குற்ற நடவடிக்கை மேற்கொள்வதை அனுமதிக்க கூடாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடந்த மார்ச் மாதமே டிஜிபியிடம் புகார் அளித்ததாகவும்,
புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்த போது, 17 கோடி ரூபாய்க்கான வருவாய் ஆதாரங்களை தெரிவிக்கவில்லை எனக் கூறி போலீசார் வழக்கை முடித்து விட்டதாகவும், போதுமான ஆதாரங்களை வழங்கியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறை தரப்பில், ராஜேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், வழக்கு ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரரின் புகாரையும் சேர்த்து விசாரிக்கும்படி சிபிஐ-க்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரரிடம் இருந்து ஆதாரங்களைப் பெற்று, சுதந்திரமாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...

CALL ME
Exit mobile version