கவிழ்ந்துவிட்டால், எழத் தெரியாத கரப்பான் பூச்சியல்ல, நாம்!– * ஆர்ஆர். கோபால்ஜி வெளியீட்டாளர், தினமலர்
*
அன்பான வாசகர்களே, விவசாயிகளே, வர்த்தகர்களே, சிறுகடை முதலாளிகளே, தொழில் அதிபர்களே, சுயதொழில் முனைவோரே, பல துறை ஊழியர்களே, கலைஞர்களே…
இப்போது ஒட்டுமொத்த உலகத்தின் சப்தநாடியையும் ஒடுக்கி வைத்திருக்கிறது
, கரோனா. பயந்துவிட வேண்டாம்!
இதோ, இறைவனின் ஓங்கிய கையில் துப்பாக்கி இருக்கிறது. 3… 2… 1… என்று ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பித்துவிட்டான். ஒரு நொடிதான் பாக்கி இருக்கிறது. அவன் கிழித்த கோட்டின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நாமெல்லாம் ஓட்டத்தை தொடங்க வேண்டியிருக்கிறது. மீண்டும் முதலில் இருந்து ஓட வேண்டியிருக்கிறது.
காரணங்கள் தேட முடியாது. எதையும் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பின்னோக்கி பார்க்க முடியாது. ஓடியே தீர வேண்டும். ஆனால், எல்லாரும் ஓடுவார்களா…? புத்திசாலிகள் மட்டும் ஓடுவதில் தீர்மானமாக இருப்பார்கள். மற்றவர்கள் மிதிபட்டு நசுங்க வேண்டியிருக்குமே என்பதற்காக ஓடுவார்கள்.
நிச்சயமாக, நாம் ஓடத்தான் செய்வோம். ஓடுவோரில் புத்திசாலியாக இருப்பது என்று இப்போதே தீர்மானித்துவிட வேண்டும்.
நமக்கு முன் விரிந்திருக்கும் சவால், முன் எப்போதும் பார்த்திராதது.
சவால்களுக்கு மத்தியில்தான் சந்தர்ப்பங்கள் ஒளிந்திருக்கின்றன. இப்போதைய சவால், சாதாரணமானது அல்ல; மாவீரர்களுக்கானது!
மருத்துவ துறைக்கு வந்திருக்கும் சவாலை விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் முன்னின்று எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல, பொருளாதார சவாலை சமாளிப்பதுதான் நமக்கான சவால்.
இந்த போராட்டத்தின் முதல் பாடமே, துணிவோடு இருக்க வேண்டும் என்பதே. குடும்ப பொருளாதாரத்தையும் நிறுவன பொருளாதாரத்தையும் மீட்டெடுத்துக் காட்டுவேன் என்று உரக்கச் சொல்லி நம்மை நாமே உரமேற்றிக் கொள்வோம்.
தொழில் அத்தனையும் முடங்கி கிடக்கத்தான் செய்கிறது. அதற்காக, இந்த சோதனைக்காலத்தில் நம்மை நம்பியிருக்கும் எவரையும் கைவிட்டு விட வேண்டாம். பலரும் தொழிலை நிறுத்திவிட்டாலும், பெரும் நஷ்டத்தை துணிவோடு ஏற்றுக்கொண்டு, அத்தியாவசிய பணியில் தினமும் இயங்கிக் கொண்டிருக்கும் தினமலரில் எந்த பணியாளரையும் நிறுத்துவது இல்லை; சம்பள குறைப்பு செய்வதில்லை என்ற தெளிவோடு இருக்கிறோம்.
நிலமை மாறும்; முன்னேற்றம் காண்போம் என்று உறுதியாக நம்புவோம். நம்மை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்களுக்கு தைரியம் தருவோம். பணி பாதுகாப்பு பற்றிய நம்பிக்கையை தருவோம். மீண்டும் உழைத்து ஜெயிப்போம் என்று உற்சாகம் தருவோம்.
நீங்களும் மாவீரன்தான் என்பதை நிரூபிக்கும் சந்தர்ப்பம் இது. நம்மை சார்ந்தவர்களையும் அரவணைத்துக் கொள்ளுங்கள். இன்னும் திடமாக ஓடும் பலம் கிடைக்கும்.
*
இறைவனின் ஓங்கிய கையில் துப்பாக்கி இருக்கிறது.
*
ஆர்ஆர். கோபால்ஜி
வெளியீட்டாளர், தினமலர்
novelcoronavirus
corona
coronavirus