ஐ.ஐ.டி. வளாகம், உயிரியல் பூங்காவோ, நாய்கள் பூங்காவோ அல்ல எனவும், நாய்களை பராமரிப்பது ஐ.ஐ.டி.யின்

ஐ.ஐ.டி. வளாகம், உயிரியல் பூங்காவோ, நாய்கள் பூங்காவோ அல்ல எனவும், நாய்களை பராமரிப்பது ஐ.ஐ.டி.யின் பணியல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நாய்களை விடும் பகுதியாக ஐஐடி வளாகம் மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாக பராமரிக்க கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த 6 மாதங்களில் ஐஐடியில் 49 நாய்கள் இறந்துள்ளதாகவும், கூட்டுக்குழு ஆய்வறிக்கையில் 14 நோய்வாய்ப்பட்ட நாய்கள் இருப்பதாகவும், அவற்றை கால்நடை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும், எத்தனை நாய்கள் இறந்துள்ளது என்பது குறித்து கணக்கிடு செய்யவேண்டும் என பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஐஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் ஐஐடி வளாகத்தில் இருப்பதாகவும், வீட்டில் பராமரிக்க முடியாதவர்கள் நாய்களை இங்கு விட்டுச் செல்வதால் நாய்கள் எண்ணிக்கை அதிகமாவதாகவும், இந்த நாய்களை பராமரிப்பதற்காக தனி இடம் அமைக்கப்பட்டு பராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

விலங்குகள் நல வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஐஐடியில் நாய்கள் முறையாக பராமரிக்கபடுவதாக தெரவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஐ.ஐ.டி. வளாகம், உயிரியல் பூங்காவோ, நாய்கள் பூங்காவோ அல்ல எனவும், நாய்களை பராமரிப்பது ஐ.ஐ.டி.யின் பணியல்ல எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், கைவிடப்பட்ட நாய்களை விடும் பகுதியாக ஐஐடி மாறாமல் மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், ஐஐடி வளாகத்தில் ஏராளமான மான்கள் இருப்பதால், அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 19 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...