ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க மறுத்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க மறுத்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆனால், 2019 ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் பொதுசின்னமாக தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி, புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை நிராகரித்து செப்டம்பர் 17ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, உள்ளாட்சி தேர்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வி.கே.அய்யர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, முந்தைய மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் பொது சின்னம் ஒதுக்கப்படததால் உள்ளாட்சி தேர்தலில் பொதுசின்னம் ஒதுக்க கூடாது என உள்ளாட்சி தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு விதிகளில் கூறப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கை மனுவை நிராகரித்த உத்தரவை மறுபரிசீலனை செய்து உரிய முடிவை வரும் திங்கட்கிழமை தெரிவிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

You may also like...