அரசு நிலத்தை ஆக்கிரமித்து, வணிக நோக்கத்துடன் இயங்கிவரும் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்யும்படி கோரிக்கை வைக்க உரிமையில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

அரசு நிலத்தை ஆக்கிரமித்து, வணிக நோக்கத்துடன் இயங்கிவரும் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்யும்படி கோரிக்கை வைக்க உரிமையில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில், ஒரு பைசா கூட செலுத்தாமல் அனுபவித்துவரும் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென 2018ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதேசமயம் அரசிடம் மேல்முறையீடு செய்ய இந்த தீர்ப்பு தடை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி அரசை அணுகி இடத்தை ஒதுக்கும்படியும் மாற்று இடமும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. அந்த கோரிக்கையை நிராகரித்து தமிழக அரசு பிப்ரவரி 23ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நிலையில், நான்கு வாரங்களுக்குள் இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்திலிருந்து காலி செய்யும்படி சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு தஞ்சாவூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

31.37 ஏக்கர் நிலத்தை தங்களுக்கு ஒதுக்க மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பல்கலைகழகம் தரப்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் டி. ராஜா, சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைகழகம் தரப்பில் 1984ஆம் ஆண்டு முதல் அரசு நிலத்தில் பல்வேறு கல்வி நிலைய கட்டுமானங்களை கட்டி, பல மாணவர்களுக்கு கல்வி வழங்கி வரும் நிலையில், தற்போது காலி செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், மாற்று இடம் தர தயாராக இருப்பதாகவும், வித்தியாச தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் திறந்தவெளி சிறைச்சாலை கட்டுவதற்காக குறிக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், சேவை நோக்கத்துடன் இல்லாமல் வணிக நோக்கத்துடன் செயல்படும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யும்படி கோரிக்கை வைக்க உரிமையில்லை என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 29ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், பி.ஹெச். அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜரானர்.

You may also like...