அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வேட்பு மனுவில் முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து வருமான வரித்துறை

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வேட்பு மனுவில் முதலீடுகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்கள் மறைக்கப்பட்டது குறித்து வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மைலம் தொகுதி வாக்களரான கே.எஸ்.செந்தில்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு 2021ல் அசையும் சொத்துக்கள் 12 லட்சத்து 8 ஆயிரத்து 409 ரூபாயாகவும், அது தற்போது 60 லட்சத்து 64 ஆயிரத்து 152 ரூபாயாக உயர்ந்துள்ளது; ஐந்தாண்டு கால எம்.எல்.ஏ. வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பின் அளவு அபரிமிதகமாக இருக்கும் நிலையில், அதற்கான ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை; ஆண்டு வருமானம் 8 லட்சத்து 68 ஆயிரத்து 780 ரூபாய் என 2021ல் குறிப்பிட்டிருந்த நிலையில் சொத்துக்களின் அதிகரிப்பு விகிதம் என்பது நியாயப்படுத்தக்கூடிய வகையில் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

65 லட்சம் ரூபாய்க்கான வைப்புத்தொகைகள் மற்றும் முதலீடுகள் குறித்த உரிய விளக்கமும் பிரமாணப் பத்திரத்தில் இடம்பெறவில்லை; 2021ல் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பல பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது மாற்றங்கள் ஏற்பட்டும் அவற்றின் மதிப்பீடு குறித்த தெளிவற்றதன்மை நிலவுவது சந்தேகங்களை எழுப்புக்கிறது; தனது குற்றச்சாட்டுகள் குறித்து ஏப்ரல் 9ல் அளித்த புகார் மனுமீது எந்த நடவடிக்கையும் இல்லை என மனுவில் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

எனவே அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகத்தின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள விவரங்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version