அதிமுக தொழிற் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதிமுக தொழிற் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதிமுகவைச் சார்ந்த அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இரண்டு கட்டத் தேர்தல் நடந்துமுடிந்து விட்டது. மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், அண்ணா தொழிற் சங்கப் பேரவையின் உறுப்பினர் முனுசாமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இதுகுறித்து பதில் அளிக்கும்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன், எல்.பி. சண்முகசுந்தரம் ஆகியோர், கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி ஏற்கனவே, இரண்டு கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. சங்க விதிகள் படி, குறிப்பிட்ட காலத்திற்குள் தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆகவே, தேர்தலுக்கு தடை விதிக்க கூடாது என்று வாதிட்டனர்.

இதேற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன், அதிமுக தொழிற்சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். பின்னர், பிரதான மனு மீதான விசாரணையை இரண்டு வார காலத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

You may also like...