அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைபாடுகள் உள்ளதாகவும், கடன் மதிப்பை குறைத்து காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வேட்புமனுவில் சொத்து மற்றும் கடன் விவரங்களை தெரிவிக்கவில்லை எனக் கூறுவது தவறு எனவும், அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டதாகவும், எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றும் வாதிட்டார்.

ஏதேனும் விவரங்களை மறைத்திருந்தால் தான் வேட்புமனுவை நிராகரிக்க முடியும் எனத் தெரிவித்த அவர், வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்துக்களை வாங்கிய விலையையும், தற்போதைய சந்தை மதிப்பையும் குறிப்பிட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மிலானி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தகவல்களை மறைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால், அவரை போட்டியிடவே அனுமதித்திருக்க கூடாது எனவும், மனைவி பெயரில் உள்ள பங்களாவைப் பற்றிய தகவலை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை எனவும் வாதிட்டார்.

தமிழக முதல்வராக இருந்து பல சட்டங்களை கொண்டு வந்த பன்னீர்செல்வம், வேட்புமனுவில் அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இன்று இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி, பன்னீர்செல்வத்தின் மனுவை ஏற்று, அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

You may also like...

Call Now ButtonCALL ME