குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஏராளமான நிவாரணம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்கு விசாரணையில் தாமதம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு

மாநில செய்திகள்
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஏராளமான நிவாரணம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்கு விசாரணையில் தாமதம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேச்சு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டத்தில் ஏராளமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதால், வழக்குகளின் விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிர மணியன் கூறினார்.
பிப்ரவரி 16, 03:44 AM
சென்னை,
‘பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை புரிந்தவர்கள் மீதான வழக்குகளை விரைவாகவும், திறம்பட விசாரிப்பது’ குறித்து 2 நாள் தேசிய கருத்தரங்கை சென்னை ஐகோர்ட்டு மற்றும் தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாடமி இணைந்து நடத்தியது. இந்த கருத்தரங்கை குத்து விளக்கேற்றி சுப்ரீம் கோர்ட்டு நீதி பதிகள் இந்திரா பானர்ஜி, வி.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், எம்.துரைசாமி, புஷ்பா சத்தியநாராயணன், எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளும், ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன், மாவட்ட கோர்ட்டு நீதிபதிகள், சார்பு கோர்ட்டு நீதிபதிகள் என்று ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
விரைந்து தீர்வு காணவேண்டும்
இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியபோது, ‘அரசியல் சாசனம், பாலின சமத்துவத்தை வழங்கியுள்ள போதிலும் பெண்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீதான வழக்குகளில் விரைந்து தீர்வுகாண வேண்டியது அவசியம் ஆகும். பாலின சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கு இருக்கிறது.
தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதைபோல் அவசரப்படுத்தப்படும் நீதியும், புதைக்கப்பட்ட நீதிக்கு சமம் என்றுதான் கூறவேண்டும். நீதிமன்றங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும். சாட்சி விசாரணைகளை முறைப்படுத்த வேண்டும். தடயஅறிவியல் போன்ற நவீன யுக்திகளை கையாளவேண்டும். கோர்ட்டு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்புகளை விரைந்து வழங்க முடியும்’ என்று கூறினார்.
தாமதம் ஏன்?
முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசினார். அவர் பேசும்போது, ‘தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளி விவரங்களின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றம் நடந்த 21 நாட்களில் அந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசு இயற்றியுள்ள ‘திஷா’ சட்டம் கூறுகிறது. ஆனால், 21 நாட்களில் வழக்கை விசாரித்து முடித்து தீர்ப்பு வழங்குவது சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்டத்தில் ஏராளமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால், வழக்குகளின் விசாரணையில் தாமதம் ஏற்பட நீதித்துறையும் காராணமாகி விடுகிறது. ஒரு காலத்தில் தடய அறிவியல் துறையில் சிறந்து விளங்கிய தமிழகம், இன்று அறிவியல் பூர்வமான நடைமுறைகளில் முக்கியத்துவம் அளிக்கப்படாமல் உள்ளது. எனவே, தடயஅறிவியல் துறையை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.
சிறப்பு பயிற்சி தேவை
இந்த நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணைகளை முடிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பல கட்டங்களாக கோர்ட்டுகளை நாடுவதால் இந்த வழக்குகளில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற தாமதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அவை விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற வழக்குகளை கையாளுவதில் அரசு வக்கீல்களுக்கும், புலன்விசாரணை அதிகாரிகளுக்கும் சிறப்பு பயிற்சி வழங்கவேண்டும்” என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஆர்.சுப்பையா வரவேற்று பேசினார். மூத்த நீதிபதி