இயற்கை தாயை கொலை செய்யும் மணல் கடத்தல் கும்பலுக்கு இனி முன்ஜாமீன் வழங்க முடியாது ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு judge jegathees chandra

இயற்கை தாயை கொலை செய்யும்
மணல் கடத்தல் கும்பலுக்கு இனி முன்ஜாமீன் வழங்க முடியாது
ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

சென்னை, செப்.4&

இயற்கை தாயை கொலை செய்யும் மணல் கடத்தல் கும்பலுக்கு இனி முன்ஜாமீன்
கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

மணல் கடத்தல்
சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன், முன்ஜாமீன் வழக்குகளை நீதிபதி
ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா விசாரித்து வருகிறார். மணல் கடத்தல் வழக்கில்
சிக்குவோர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்ய மனுக்கள் தினமும் அதிக
எண்ணிக்கையில் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. இதை கவனித்த நீதிபதி,
Ôமணல் கடத்தல் வழக்கில் சிக்குவோருக்கு எளிதாக முன்ஜாமீன் கிடைப்பதால்
கடத்தல் குற்றம் அதிகரிக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால் நிலத்தடி நீர்
உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிந்துவிடும். அடுத்த தலைமுறையினர்
குடிநீருக்காக அலைய வேண்டிய அவல நிலை ஏற்படும். அதனால் மணல் கடத்தல்
வழக்கில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் கிடையாது என்று கூறி, மணல்
கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கேட்ட தாக்கல் செய்ய அனைத்து வழக்குகளையும்
தன் முன் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.
இதன்படி சுமார் 50 முன்ஜாமீன் வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா
முன்பு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அப்போது அரசு தரப்பில்
வக்கீல் முகமது ரியாஸ் ஆஜராகி வாதிட்டார்.
ஊரடங்கிலும் நிறுத்தப்படவில்லை
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:&
சுற்றுச்சூழல், இயற்கை வளம் ஆகியவற்றை பாதுகாப்பது அரசின் கடமை
மட்டுமல்ல, அரசியலமைப்பு சட்டத்தின்படி அது ஒவ்வொரு குடிமக்களின்
அடிப்படை கடமையாகும். மணல் கடத்தல் வழக்கில் சிக்குவோரின் முன்ஜாமீன்
மனுக்கள் அதிக அளவில் ஐகோர்ட்டில் தினமும் தாக்கல் செய்யப்படுகின்றன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு,
உலகமே ஸ்தம்பித்து போனது. கட்டுமான பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும்
நிறுத்தப்பட்டன. அப்போதும் கூட இந்த மணல் கடத்தல் தொழிலை நிறுத்தப்படாமல்
தங்குதடையின்றி நடந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வளங்களை
இந்த கும்பல் கொள்ளை அடிக்கின்றன. இதனால் நிலத்தடி நீர் ஆதாரம்
அழிக்ப்படுகின்றன. இதை தடுக்கவேண்டாமா? என்ற மிகப்பெரிய கேள்வி
எழுந்துள்ளது.

தொழில் செலவு

கடந்த ஆகஸ்டு 31&ந்தேதி வரை இதுபோன்ற வழக்கில் சிக்கியோருக்கு,
முதல்&அமைச்சர் பொது நிவாரண நிதி அல்லது மாவட்ட கனிம வள மேம்பாட்டு
அமைப்புக்கு பெருந்தொகை அபராதமாக செலுத்த வேண்டும் என்று நிபந்தனையுடன்
முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இவ்வாறு உத்தரவிட்டால் மணல் கடத்தல் குறையும்
என்ற எண்ணத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. ஆனால் குற்றச்செயல்
குறையாமல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நீதிமன்றம் உத்தரவின்படி
செலுத்தப்படும் இதுபோன்ற அபராத தொகையை, தொழில் செலவாக கடத்தல் கும்பல்
கருத தொடங்கிவிட்டனர். எப்படியும் முன்ஜாமீன் கிடைத்து விடும். சிறை
செல்ல வேண்டாம் என்ற எண்ணமும் அவர்களிடம் ஏற்பட்டு விட்டது.
அதுமட்டுமல்ல மணல் கடத்தலுக்கு இந்த கும்பல், விலை உயர்ந்த பெரிய அளவிலான
டாரஸ் லாரிகள், பொக்லைன்கள் என்று கனரக வாகனங்களையும் அதிக அளவு
பயன்படுத்த தொடங்கிவிட்டனர். டிராக்டரின் பின் பகுதியை மாட்டு வண்டியாக
பயன்படுத்தி மணலை கடத்துகின்றனர்.

உரிமையாளர் கைது இல்லை

போலீசார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பல வழக்குகளில் மணல் கடத்தல்
வாகனங்களை பறிமுதல் செய்கின்றனரே தவிர, அதன் உரிமையாளர்கள், வாகனத்தை
ஓட்டியவர்களை பிடிப்பது இல்லை. அவர்கள் உள்ளூரில் சுதந்திரமாக
உலாவுகின்றனர். அதுமட்டுமல்ல அவர்கள் நீதிமன்றங்களில் எளிதாக
முன்ஜாமீனும் கிடைத்து விடுகிறது. இதனால், குற்றவாளிகளை கைது செய்யாமல்
போலீசாரும் விட்டு விடுகின்றனர்.
இந்த மணல் கடத்தலை தடுக்க இப்போது இல்லை 20 ஆண்டுகளுக்கு முன்பே
ஐகோர்ட்டு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 1999ம் ஆண்டு ஐகோர்ட்டு
அப்போதைய நீதிபதி சண்முகம், 2002ம் ஆண்டு ஐகோர்ட்டு அப்போதைய நீதிபதி
கே.சம்பத் ஆகியோர் விரிவான தீர்ப்புகளை பிறப்பித்துள்ளனர்.
மணல் கடத்தல் கும்பலுடன் வருவாய் அதிகாரிகள், போலீசார் கைகோர்த்து
செயல்படுவதையும் சுட்டிக்காட்டி, இந்த கடத்தலை தடுக்க வேண்டும் என்று
கூறியுள்ளனர். ஆனால் இவர்களது தீர்ப்பை அதிகாரிகள் தீவிரமாக
பின்பற்றவில்லை.

இயற்கை தாய் கொலை

காடு, மலை, ஆறு என்று எல்லா இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும்.
தன்னுடைய சொந்த இயற்கை தாயை கொலை செய்யும் இதுபோன்ற நபர்களுக்கு
முன்ஜாமீன் இனியும் கொடுக்க முடியாது. முன்ஜாமீன் வழங்கும் சிறப்பு
அதிகாரத்தை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட செசன்சு கோர்ட்டுக்கு குற்றவியல்
விசாரணை முறைச் சட்ட வழங்குகிறது. இந்த சட்டத்தின்படி முன்ஜாமீன்
வழங்குவதும், வழங்காததும் நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரத்துக்கு
உட்பட்டது. நீதிமன்றத்துக்கு உள்ள இந்த சிறப்பு அதிகாரத்தை மணல் கடத்தல்
கும்பல் தவறாக பயன்படுத்த இனியும் அனுமதிக்க முடியாது. மணல் கடத்தல்
வழக்கில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் கிடையாது. முன்ஜாமீன் கேட்டு
தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன். இந்தி
தீர்ப்பின் நகலை அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும், சுற்றறிக்கையாக
ஐகோர்ட்டு பதிவுத்துறை அனுப்பிவைக்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
…………………………

You may also like...