Veda nilayam case c v shanmugam admk filed appeal mhc

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேல் முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு, அறிவித்தது.

அந்த அறிவிப்பை செயல்படுத்திம் விதமாக, வேதா நிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதேபோல, வேதா நிலையத்துக்கு இழப்பீடாக 67 கோடியே 90 லட்சம் ரூபாயும் நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யப்பட்டது.

வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்தும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சேஷசாயி, நினைவு இல்லம் அமைப்பது பொதுப்பயன்பாடும் இல்லை என்றும், ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் நினைவில்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் கூறி, வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்து கடந்த 24ம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல், உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுக்களில், புகழ்பெற்ற தலைவர்களின் இல்லங்களை நினைவு இல்லங்களாக மாற்றுவது புதிதல்ல என்றும், உலக தலைவர்கள் பலரின் இல்லங்கள் நினைவில்லங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேதா நிலையம் கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்ய அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல் முறையீடு செய்ய உரிமை உள்ளதாகவும், அதனால் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

நினைவில்லமாக மாற்றுவது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்பன போன்ற தனி நீதிபதி கருத்துக்கள் தேவையற்றவை எனவும், இந்த தீர்ப்பு அதிமுக தொண்டர்களை புண்படுத்தியுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, வேதா நிலையம் இல்லத்தின் சாவியை ஒப்படைத்து விட்டால், அது கட்சிக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை அமைத்ததன் நோக்கம் வீழ்த்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதா நிலையம் கையகப்படுத்தப்படும் முன் தீபா, தீபக் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், அரசு தன்னிச்சையாக செயல்பட்டதாக எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் கையகப்படுத்தியதை ரத்து செய்த உத்தரவு தவறானது என்றும் கூறப்பட்டுள்ளது.

வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், பொது பயன்பாடு இல்லை என தனி நீதிபதி முடிவுக்கு வந்திருக்க கூடாது என்பதால், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மேல் முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like...