Temple Rskj bench new order
புராதன கோவில்களை பாதுகாப்பது தொடர்பாகவும், கோவில்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதிப்பது தொடர்பாகவும் முடிவெடுக்க, மாநில புராதன சின்ன ஆணையத்தை அமைக்க தமிழக அரசுக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன் வணிகவளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புராதன கோவில்கள், கட்டிடங்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட புராதன சின்ன ஆணையத்தை நான்கு வாரங்களில் அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு கடந்த அக்டோபர் 9 ம்தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, புராதன சின்ன ஆணையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு துவங்கியுள்ளதாகவும், அதற்கு மூன்று மாதங்களில் அமைக்கப்படும் என, தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளக் கூடும் என்பதால், தரிசனத்துக்கு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருவண்ணாமலை மட்டுமல்லாமல், தமிழகத்தில் பிற புராதன கோவில்களிலும் பணிகள் மேற்கொள்ள, புராதன சின்ன ஆணையம் ஆணையம் அமைக்க வேண்டியது அவசியமாகிறது. புராதன சின்ன ஆணையம் அமைக்கும் வரை, திருண்ணாமலை கோவிலில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதித்து பிறப்பித்த உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டனர்.
ஆணையம் அமைக்க, ஒரு மாத கால கூடுதல் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், கார்த்திகை தீபத்தை ஒட்டி, தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளவும் அறநிலையத் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 18 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதற்கிடையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இந்த பிரச்னைக்கு தீட்சிதர்கள் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.