Sathiskumar judge Baratha chakravarthy judge bench. Murugan statue marudamalai case order
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள சரியான இடம், அடிப்படை வசதிகள் குறித்த முழு விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அதுவரை சிலை அமைக்கும் பணிகளை துவக்க வேண்டாம்
என அறிவுறுத்தியுள்ளது.
கோவை வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித்தடமான மருதமலை பகுதியில், 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறப்பு வக்கீல் சீனிவாசன் ஆஜரானார்
அப்போது, அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், முருகன் சிலை அமைக்க தடையில்லா சான்று கோரி மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம், வேளாண், வருவாய் மற்றும் சுரங்கத்துறைகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் போலம்பட்டி காப்புக்காட்டில் இருந்து 51 மீட்டர் தொலைவில், சிலை நிறுவ திட்டமிடப்பட்டது. தற்போது, 137 மீட்டர் தொலைவில் நிறுவ திட்டமிட்டப்பட்டு உள்ளது. இப்பகுதியில் சிலை அமைவதால், யானை வழித்தடங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், முருகன் சிலை எந்த பகுதியில் அமைய உள்ளது என்ற சரியான விவரங்கள் இல்லை.
இந்த சிலை அமைய உள்ள பகுதிக்கு, எவ்வளவு பக்தர்கள், பொதுமக்கள் வருகை தருவர், அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்துமிடம் எங்கு அமையவுள்ளது. அதற்கு ஏற்ப இடம் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அறநிலையத் துறை தரப்பில், பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள இட வசதி உள்ளது என பதிலளிக்கப்பட்டது.
தொடர்ந்து நீதிபதிகள், வனப்பகுதியில் இவ்வளவு உயரத்தில் சிலை அமைக்கப்படும் போது, அதை பார்வையிட வருவோருக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விட்டு செல்லும் குப்பைகள் எவ்வாறு அகற்றப்படும் என்பன போன்றவை குறித்து திட்டமிடப்பட்டதா? திடக்கழிவுகளால், நாளடைவில் வனமே மறைந்துவிடும்.
இந்த திட்டத்தால், வனப்பகுதிக்கு, எவ்வித தொந்தரவும் ஏற்படக்கூடாது. பல்வேறு காரணங்களால் வனப்பகுதிகள் சுருங்கி, மனித-விலங்குகள் மோதல்களும் நடந்து வருகின்றன. போதிய வசதிகள் செய்யப்படவில்லை எனில், நெரிசல் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என, ஆந்திராவில் கோவிலில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டினர்.
மலேஷியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில், விதிமுறைகள் ஒழுங்காக கடைபிடிக்கப்படுகிறது எனக் கூறிய நீதிபதிகள், கூட்ட மேலாண்மை நிர்வகிக்கும் முறை, சிலை அமைய உள்ள சரியான இடம், வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்த முழு விபரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.
அதுவரை சிலை அமைக்கும் பணிகளை துவக்க வேண்டாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.