Judge N Senthil kumar direct acter Nyanthara film company to file counter regarding chandramukhi issue
Judge N Senthil kumar direct acter Nyanthara film company to file counter regarding chandramukhi issue
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஆவண பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ தயாரித்தது. இந்த ஆவணப்படம், 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெ
ட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த ஆவணப்படத்தில், தனது வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி பெறாமல் நானும் ரவுடி தான் பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி பெறாமல், சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டி, படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்னேஷனல் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஆவண படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் நோட்டீஸ் அனுப்பியும், இன்னும் அவற்றை பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆவணப் படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ஆவண படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும். ஆவண படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, இந்த பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில், பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் வழக்கில் இன்னும் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.