Judge ananth venkadesh சுற்றுலா பேருந்துகளை அகில இந்திய அளவில் இயக்க அனுமதி பெற்றிருந்தாலும் தமிழகத்திற்குள் இயக்கும்போது தனி வரி செலுத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சுற்றுலா பேருந்துகளை அகில இந்திய அளவில் இயக்க அனுமதி பெற்றிருந்தாலும் தமிழகத்திற்குள் இயக்கும்போது தனி வரி செலுத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் திருமூர்த்தி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தாங்கள், படுக்கை வசதி கொண்ட சுற்றுலா பேருந்துகளின் உரிமையாளர்கள் என்றும், பேருந்துகளை நாகலாந்து மற்றும் புதுவையில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.மோட்டார் வாகனச் சட்டபடி பேருந்துகளை இந்தியா முழுவதும் இயக்குவதற்கு அனுமதி பெற்றுள்ளதாக மனுவில் குறிப்பிடுள்ளனர்.
தங்களது சுற்றுலா பேருந்தை புதுவையில் இருந்து கோவைக்கு இயக்கிய போது கடலூர் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர், தன்னிச்சையாவும், சட்ட விரோதமாகவும் பேருந்தை முடக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அனுமதி நிபந்தனை மீறப்பட்டுவிட்டதாக கூறி போக்குவரத்து ஆய்வாளர் முடக்கி விட்டதாகவும், எனவே பேருந்து முடக்கத்தை நீக்கி வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டுமென மனுவில் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் எந்தவொரு நிபந்தனைகளையும் மீறப்படவில்லை என தெரிவித்தனர்
..அகில இந்திய அளவில் அனுமதி பெற்றுள்ளதால், தமிழ்நாடு மோட்டார் வாகன வரி சட்டத்தின் கீழ் தமிழகத்தில் வாகனத்தை இயக்க எந்த வரியும் செலுத்த தேவையில்லை என்றும், தமிழகத்திற்கு மட்டும் தனியாக வரி செலுத்தினால் அது இரட்டை வரி செலுத்துவது போல் ஆகிவிடும் என்று தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் நஷ்ருதீன், தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிகளின்படி தமிழகத்தில் பேருந்துகள் பயணிக்கும் போது வரி செலுத்த வேண்டுமெனவும், அந்த சட்டத்தில் எவ்வளவு வரி செலுத்த என்று கூறபட்டுள்ளதாகவும், வெளி மாநில பேருந்தாக இருந்தாலும், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி வரி செலுத்த வேண்டும் என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மத்திய அரசு கொண்டு வந்த புதிய விதிகளின் படி, மாநில அரசுகள் வரி விதிக்கும் சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு எடுத்து கொள்ளவில்லை என்றும், எனவே மாநில அரசுக்கு வரி செலுத்தி தான் ஆக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்
இவ்வாறு வரி விதிப்பது மாநில அரசின் சிறப்பு அதிகாரம் என்பதால், தமிழக அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்றும் ,
இதில் எந்தவித சட்ட விரோதமும் இல்லை என்பதால் மனுதாரர் வரி செலுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக மனுதாரர் போக்குவரத்து துறைக்கு உரிய விளக்கம் அளித்து பேருந்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...

CALL ME
Exit mobile version