விதிமீறல்களை சுட்டிக்காட்டாமல், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும் மேடையாக பொது நல வழக்குகளை தரம் குறைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டாமல், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும் மேடையாக பொது நல வழக்குகளை தரம் குறைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலூரில், உலகளந்த பெருமாள் கோவில் அருகில் புதிய பேருந்து நிலையம் கட்ட தடை விதிக்கக் கோரி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த ஏ.விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தற்போது கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியில் இருந்து 400 மீட்டர் தூரத்தில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருவதால், புதிய பேருந்து நிலையம் கட்டுவது, அரசுக்கு தேவையற்ற செலவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புராதன, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலுக்கு அருகில் பேருந்து நிலையம் கட்டுவது, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனவும், இதுசம்பந்தமாக கடந்த பிப்ரவரி, மே மாதங்களில் புகார் மனுக்கள் அனுப்பியும், அவை பரிசீலிக்கப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அடிப்படை சட்டவிதி மீறல்களை நிரூபிக்காமல், வெறும் புகைப்படங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொது நல வழக்கை ஏற்று, வளர்ச்சிப் பணிகளை முடக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
சட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டாமல், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும் மேடையாக பொது நல வழக்குகளை தரம் குறைக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பேருந்து நிலையம் எங்கு அமைய வேண்டும் என்பதை முடிவு செய்யும் சிறந்த நீதிபதிகள் அதிகாரிகள் தான் எனவும் தெரிவித்துள்ளனர்.
நகர்புற வளர்ச்சி, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களை மதிப்பீடு செய்ய வேண்டியது அதிகாரிகள் தான் எனவும், சட்டவிரோதம், விதிமீறல்கள் நிரூபிக்கப்படாத நிலையில், இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
….